பழிக்கு பழி.. முலாயம் மருமகளையே தட்டி தூக்கிய பிஜேபி..! அதிர்ச்சியில் அகிலேஷ்

By Raghupati RFirst Published Jan 19, 2022, 12:13 PM IST
Highlights

உத்தரப்பிரதேச அரசியலில் அடுத்த திருப்பமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் இன்று பாஜகவில் இணைந்தார்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்போடு முதல்வர் யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாஜக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜகவுக்கு கடுமையான சவால் அளிக்கும் வகையிலான தேர்தல் பணியில் ஈடுபட்டு பாஜகவினருக்கு சவால் விடுகிறது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி.

சமாஜ்வாதிக்கு ஆதரவாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும், பிற சிறிய கட்சிகளும் இருந்து வருகின்றன. சமீப நாட்களாக பாஜகவில் இருந்து பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் வரிசையாக சமாஜ்வாதியில் இணைந்து வந்தனர். குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் ஸ்வாமி பிரசாத் மெளர்யா, தரம் சிங் சைனி, தாரா சிங் செளகான் போன்ற யோகி அமைச்சரவையில் இடம்பிடித்திருந்த அமைச்சர்கள் திடீரென பாஜகவில் இருந்து விலகி அகிலேஷ் கட்சியில் இணைந்தனர்.

இவர்கள் மட்டுமல்லாமல் வினய் ஷாக்யா, ரோஷன் லால், முகேச் வெர்மா, பகவதி சாகர் போன்ற பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் சமாஜ்வாதியில் தங்களை இணைத்துக் கொண்டனர். யாதவ வாக்குகளை கடந்து அகிலேஷுக்கு செல்வாக்கு கிடையாது என்ற பாஜக தொடர்ந்து சொல்லி வந்தது. இப்படிப்பட்ட சூழலில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்த ஸ்வாமி பிரசாத் மெளர்யா போன்ற அமைச்சர்களின் வருகை சமாஜ்வாதி கட்சிக்கு பலமாக அமைந்தது.

பழிக்கு பலியாக தற்போது சமாஜ்வாடி கட்சிக்கு பெரிய அடியை தந்துள்ளது பாஜக. சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் மற்றொரு மகன் பிரதீப் யாதவின் மனைவி அபர்ணா யாதவ்  இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியில் இணைந்தார் அபர்ணா யாதவ்.

முலாயம்சிங் யாதவின் 2-வது மனைவி சாதனா குப்தாவின் மகன் பிரதீப் யாதவ். அவரது மனைவிதான் அபர்ணா யாதவ். பிரதீப் யாதவுக்கும் அர்பணா யாதவுக்கும் 2011-ல் திருமணம் நடைபெற்றது. 2017-ல் லக்னோ கன்டோமெண்ட் தொகுதியில் அபர்ணா யாதவ் போட்டியிட்டு பாஜகவின் ரீட்டா பகுகுணாவிடம் தோல்வி அடைந்தார்.

பாஜகவில் இணைந்துள்ள அபர்ணா யாதவின் தந்தை அரவிந்த் சிங், பத்திரிகையாளர். அவரது தாய், தந்தை இருவரும் உ.பி. அரசில் அதிகாரிகளாக பணிபுரிகின்றனர். ஏற்கனவே என்.ஆர்.சி. விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தவர் அபர்ணா. அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கத்தையும் ஆதரித்தவர் அபர்ணா என்பதும் குறிப்பிடத்தக்கது. பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சிக்கு தாவும் நிலையில், முலாயம்சிங் யாதவின் மருமகளை பாஜக கட்சியில் சேர்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!