அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு விசா மறுப்பு: சீனாவுக்கு அனுராக் தாக்கூர் கண்டனம்!

By Manikanda Prabu  |  First Published Sep 24, 2023, 12:50 PM IST

அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டதற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்துள்ளார்


சீனாவின் ஹாங்சோ நகரில், 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பங்கேற்க அருணாச்சல பிரதேச வீரர்கள் 3 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், சீனாவின் நடவடிக்கை பாரபட்சமானது எனவும், ஒலிம்பிக் சாசனத்திற்கு எதிரானது என்றும் கூறினார்.

ஒனிலு டெகா, மெப்புங் லாம்ங்கு ஆகிய இரண்டு தடகள வீரர்கள் ஹாங்சோ ஆசிய விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவால் அனுமதிக்கப்பட்ட போதிலும், சீனாவுக்கான நுழைவு விசாக்களாகச் செயல்படும் அவர்களின் அங்கீகார அட்டைகளைப் பதிவிறக்க முடியவில்லை. மற்றொரு தடகள வீரரான நெய்மன் வாங்சுவினால் அங்கீகார அட்டையை பதிவிறக்கம் செய்ய முடிந்தது. ஆனால், சீனாவுக்கான நுழைவு அவருக்கு மறுக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

இதற்கு பதிலடியாக சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அனுராக் தாக்கூர், “நான் சீனாவில் இல்லை, நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன், எனது வீரர்களுடன் நிற்கிறேன். ஒலிம்பிக் சாசனத்திற்கு எதிரான ஒரு நாட்டின் இந்த பாரபட்சமான அணுகுமுறை எந்தவிதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல.” என தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பை மறுத்ததால், எனது சீனப் பயணத்தை ரத்து செய்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.

அதேபோல், இந்த விவகாரத்தில் சீனாவிடம் கடும் எதிர்ப்பை இந்தியா பதிவு செய்ததாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். இந்தியா தனது நலன்களைப் பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிமையை வலியுறுத்தி, சீனாவிடம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய விளையாட்டு வீரர்களை சீனா வேண்டுமென்றே குறிவைத்ததாகவும், இது உறுப்பு நாடுகளின் போட்டியாளர்களுக்கு எதிரான பாகுபாட்டை வெளிப்படையாக தடை செய்கிறது எனவும் அரிந்தம் பாக்சி குற்றம் சாட்டியுள்ளார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை திமுக குறை கூறுவதா? தமிழிசை காட்டம்!

“அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சில இந்திய விளையாட்டு வீரர்களுக்கு, சீனாவின் ஹாங்சோவில் நடக்கும் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அங்கீகாரம் மற்றும் நுழைவு அனுமதி மறுப்பதன் மூலம், சீன அதிகாரிகள் வேண்டுமென்றே நம்மை குறிவைத்து நமது வீரர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டியுள்ளனர் என்பதை இந்திய அரசு அறிந்துள்ளது.” என்று அறிக்கை ஒன்றில் அரிந்தம் பாக்சி குற்றம் தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பிரச்சினை அண்மைக்காலமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. இதனிடையே, சீனாவின் நிலையான வரைபடத்தின் 2023 பதிப்பை அந்நாடு வெளியிட்டது. அதில், அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவின் எல்லைக்குள் இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கடும் சர்ச்சையான நிலையில், ஜி20 உச்சி மாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!