ஆகஸ்ட் 30 முதல் அரசாங்க அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட எண்களுக்கு மட்டும் மொபைல் இன்டர்நெட் வசதி திரும்பக் கிடைத்தது.
மணிப்பூர் மாநில அரசு 143 நாட்களுக்குப் பிறகு மொபைல் இன்டர்நெட் சேவை மீண்டும் தொடங்க அனுமதித்துள்ளது. இது நாட்டிலேயே இரண்டாவது நீண்ட கால இன்டர்நெட் தடை காலம் ஆகும். இதற்கு முன் ஜம்மு காஷ்மீரில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 4ஆம் தேதி முதல் 552 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருந்தது. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு முன் அங்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.
“போலிச் செய்திகள், பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் பரவுவதைத் தடுக்க மே 3ஆம் தேதி மொபைல் இணைய சேவைகளை அரசாங்கம் நிறுத்தியது... கடந்த இரண்டு மாதங்களில், நிலைமை மேம்பட்டுள்ளது, மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறைந்துள்ளன" என்று முதல்வர் பிரேன் சிங் கூறியிருக்கிறார்.
மணிப்பூரில் இன்டர்நெட் சேவை தொடங்கப்பட்டுள்ள அதே நேரத்தில் இம்பாலின் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஒரு நாளுக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்டது. ஆனால், மொத்த கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதா நீட்டிப்பதா என்பது குறித்து முடிவெடுக்கும் வரை இம்பாலில் இரவு நேர ஊரடங்கு தொடரும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இம்பால் மற்றும் மணிப்பூரின் பிற இடங்களில், மொபைல் இணைய சேவைகள் தொடங்கியிருப்பது நீண்டகால எதிர்பார்ப்பு நடந்துள்ளது. இதனை வரவேற்ற மணிப்பூர் மக்கள் சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியுடன் உரையாடிக்கொள்கின்றனர். கலவரத்தின்போது வெளியேறிய மாணவர்கள் விரைவில் மாநிலத்திற்கு திரும்புவது பற்றி பதிவுகளை எழுதியுள்ளனர்.
முன்னதாக, ஜூலை 24 அன்று பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவைகள் நிபந்தனைகளுடன் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்ததன. பின், ஆகஸ்ட் 30 முதல் அரசாங்க அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட எண்களுக்கு மட்டும் மொபைல் இன்டர்நெட் வசதி திரும்பக் கிடைத்தது.