இந்தியாவில் சாலை விபத்துகளில் 2022ஆம் ஆண்டில் மட்டும் 1.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 11.9 சதவீதம் அதிகமாகும்
'இந்தியாவில் சாலை விபத்துகள்-2022' என்ற ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் மட்டும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, இதில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், இறப்புகளின் எண்ணிக்கை 9.4 சதவீதமும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15.3 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதிவேகம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்காதது உள்ளிட்டவை இந்த விபத்துகளுக்குக் காரணங்களாக அமைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சாலை விபத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2022ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. 2018ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துள்ளது.
2022ஆம் ஆண்டைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் மத்தியப் பிரதேசமும், மூன்றாவது இடத்தில் கேரளாவும், நன்காவது இடத்தில் உத்தரப்பிரதேசமும் உள்ளன.
கருக்கா வினோத் ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை மனுத்தாக்கல்!
சாலை விபத்துக்களை தடுப்பதற்கு வலுவான நடவடிக்கைகளை அமல்படுத்த சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்தியாவில் சாலை விபத்துகள்-2022” என்ற இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது, சாலைப் பாதுகாப்பு துறையில் கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் மதிப்புமிக்க ஆதாரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சாலை விபத்துக்களின் பல்வேறு அம்சங்கள், அவற்றின் காரணங்கள், உள்ளிட்ட ஆழமான நுண்ணறிவுகளை வழங்குவதாகவும், வளர்ந்து வரும் போக்குகள், சவால்கள் மற்றும் அமைச்சகத்தின் சாலைப் பாதுகாப்பு முன்முயற்சிகள் குறித்தும் இந்த அறிக்கை தகவல்களை வழங்குவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.