ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு குறித்து அவரது வேட்புமனுவில் இருந்து தெரிய வந்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. அந்த வகையில், மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள், 25 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநிலத்துக்கு ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஆந்திர மாநில சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் தங்களது வேட்புமனுக்களை செய்து வருகின்றனர். அதில், வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ள தங்களது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், ஆந்திர மாநிலம் குப்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அம்மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு குறித்து வேட்புமனு சமர்ப்பின்போது, அவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதன்படி, சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 41 சதவீதம் உயர்ந்து ரூ.810.42 கோடியாக உயர்ந்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி தனது கணவர் சார்பில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். சொத்தில் பெரும் பகுதி நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் பெயரிலேயே உள்ளது. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 2.26 கோடி பங்குகளுக்கு புவனேஸ்வரி உரிமையாளர். தற்போதைய சந்தை மதிப்பில் அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.337.85 ஆகும். அதன்படி, புவனேஸ்வரியிடம் உள்ள பங்குகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.764 கோடியாகும். மேலும், புவனேஸ்வரியிடம் 41.5 கிலோ வெள்ளி மற்றும் 3.4 கிலோ தங்கமும் உள்ளது.
Andhra pradesh Election 2024: 5 ஆண்டுகளில் 191 சதவீதம் உயர்ந்த பவன் கல்யாண் சொத்து மதிப்பு!
சந்திரபாபு நாயுடுவின் குடும்பம் 2019 ஆம் ஆண்டில் ரூ. 574.3 கோடி மதிப்பிலான அசையா மற்றும் அசையும் சொத்துக்களை வைத்திருந்த நிலையில், அக்குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 41 சதவீதம் உயர்ந்து ரூ.810.42 கோடியாக உள்ளது. தனிப்பட்ட முறையில் சந்திரபாபு நாயுடுவிடம் ரூ.4.80 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ.36.31 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன. அவரது குடும்பத்தின் மொத்த கடன் சுமார் ரூ.10 கோடிக்கு அதிகமாக உள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பெயரில் ரூ..25 லட்சம் மதிப்புள்ள அம்பாசிடர் கார் ஒன்று உள்ளது. அவர் மீது 24 வழக்குகள் உள்ளன.
ஆந்திர மாநில மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சிக்கு 144 சட்டமன்றம், 17 மக்களவைத் தொகுதிகளும், பாஜகவுக்கு 6 மக்களவை, 10 சட்டமன்றத் தொகுதிகளும், ஜனசேனா கட்சிக்கு இரண்டு மக்களவை, 21 சட்டமன்றத் தொகுதிகளும் கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தலில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.