Andhra pradesh Election 2024: 5 ஆண்டுகளில் 191 சதவீதம் உயர்ந்த பவன் கல்யாண் சொத்து மதிப்பு!

By Manikanda Prabu  |  First Published Apr 24, 2024, 10:40 AM IST

ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாணின் சொத்து மதிப்பு குறித்து அவரது வேட்புமனுவில் இருந்து தெரிய வந்துள்ளது


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. அந்த வகையில், மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள், 25 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநிலத்துக்கு ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஆந்திர மாநில சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் தங்களது வேட்புமனுக்களை செய்து வருகின்றனர். அதில், வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ள தங்களது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

Tap to resize

Latest Videos

அந்த வகையில், ஆந்திர மாநிலம் பிதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாணின் சொத்து மதிப்பு குறித்து வேட்புமனு சமர்ப்பின்போது, அவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

அதன்படி, பவன் கல்யாணின் சொத்து கடந்த 5 ஆண்டுகளில் 191 சதவீதம் உயர்ந்து ரூ.164.53 கோடியாக உயர்ந்துள்ளது. பவன் கல்யாணின் வருமானம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.60 கோடியாக இருந்தாலும், அவரது குடும்பத்தின் மொத்த அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.164.53 கோடி என தெரிவித்துள்ளார்.

பிரமாணப் பத்திரத்தில் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.65.77 கோடி என பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார். அவரது நான்கு குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தினரிடம் ரூ.46.17 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.118.36 கோடி அளவுக்கு அசையாச் சொத்துகளும் உள்ளன. ரூ.5.4 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ரூ.2.3 கோடி மதிப்புள்ள டொயோட்டா க்ரூஸர் கார்கள் உள்பட ஹார்லி டேவிட்சன் பைக், பென்ஸ் மேபேக் கார் என 11 வாகனங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Andhra pradesh Election 2024: 41 சதவீதம் உயர்ந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சொத்து மதிப்பு!

2018-19 ஆம் ஆண்டிற்கான வருமான வரித் தாக்கலின்போது, ரூ.1.10 கோடி நஷ்டம் என கணக்கு காட்டியிருந்த பவன் கல்யாண், தனக்கு தற்போது ரூ.65.77 கோடி கடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். 1984ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பவன் கல்யாண் மீது ஆத்திரமூட்டும் பேச்சுகள் மற்றும் மோட்டார் வாகன விதிகளை மீறியது உட்பட எட்டு கிரிமினல் வழக்குகள் உள்ளன.

ஆந்திர மாநில மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சிக்கு 144 சட்டமன்றம், 17 மக்களவைத் தொகுதிகளும், பாஜகவுக்கு 6 மக்களவை, 10 சட்டமன்றத் தொகுதிகளும், ஜனசேனா கட்சிக்கு இரண்டு மக்களவை, 21 சட்டமன்றத் தொகுதிகளும் கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!