
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவை சேர்ந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலைப்பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை அடுத்து டெல்லி பாலம் விமான நிலையத்தில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. அங்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து 7 பீரங்கி குண்டுகள் முழங்க ஒரே தகன மேடையில் வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத், மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களின் மகள்கள் க்ரித்திகா, தாரிணி இருவரும் இறுதிச் சடங்குகள் செய்து உடல்களுக்கு தீமூட்டினர். முன்னதாக உடல்கள் எரிந்த நிலையில் இருந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் ,அவரது மனைவி மற்றும் முப்படைத் தளபதியின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிபின் ராவத், மதுலிகா ராவத் மற்றும் பிரிக் எல்எஸ் லிடர் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்றன. அதே சமயம்,விபத்தில் உயிரிழந்த மற்றவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணிகள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கமாண்டோ வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலும், இருவரின் உடல்களும் அவர்களது குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த விபத்து தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இருவரது உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவர்களது குடும்பத்தினர் மத்தியில் சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதன்படி, அவர்கள் இருவரின் இறுதிச்சடங்கு முழு ராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. இந்நிலையில்,குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஆந்திர முதலமைச்சர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லான்ஸ் நாயக் பி சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சாய் தேஜா அவர்கள் முப்படைத்தளபதி பிபின் ராவத் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.