
ஆனந்த் மஹிந்திரா :
மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான "மஹிந்திரா" குழுமத்தை கட்டி காக்கும் ஆனந்த் மஹிந்திரா மிகவும் வித்தியாசமானவர் மற்றும் மிகவும் மனிதநேயம் கொண்ட நல்ல மனிதர். எவ்வளவு பணிகள் இருந்தாலும் டிவிட்டரில் மிகவும் பரபரப்பாக இருப்பவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார்.
இதன் காரணமாக சமூக வலைதளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். யார் எந்தவொரு செய்தியை பகிர்ந்தாலும், அதனை எந்தவித ஈகோ இல்லாமல், அதற்கு பதில் சொல்லும் இவரது பணிவுக்கு இணையத்தில் ரசிகர்கள் ஏராளம்.
சென்னை இளைஞர் :
அவரது சமீபத்திய பதிவில், பாண்டி பஜாரில் சென்னையைச் சேர்ந்த 20 வயது கலைஞர் பற்றி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் சென்னையில், இறுதியாண்டு விஷுவல் கம்யூனிகேஷன் மாணவரான 20 வயதான எம் சுரேந்தர், தனது திறமையான கைகளால் மனிதர்களை பார்த்து அப்படியே வரைந்துக் கொடுக்கிறார்.
இதனை ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, அந்த இளைஞரைப் பாராட்டி உறுதிப்படுத்துதல்+புத்திசாலித்தனம்+பொறுமை=வெற்றிக்கான சூத்திரம் என்பதை பின்பற்றும் மற்றொரு துணிச்சலானவர். அதிக லாபம் தரும் தொழிலில் நுழைய வேண்டும் என்ற அழுத்தம் இருந்தபோதிலும், கலையில் அவர் ஒட்டிக்கொண்டிருப்பதை நான் உற்சாகப்படுத்துகிறேன். அவருக்கு எனது புகைப்படத்தை அனுப்புவதன் மூலம் ஒரு உருவப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டு அந்த இளைஞனை பாராட்டியுள்ளார்.
இதுபற்றி பேசிய சுரேந்தர், 'நான் 12ம் வகுப்பில் 600க்கு 523 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். உயர் படிப்புக்கு பொறியியல் அல்லது மருத்துவத்தை தேர்வு செய்வேன் என்று அனைவரும் நினைத்தபோது, இந்தக் கலையை விட்டு விலக விரும்பாததால், விஷுவல் கம்யூனிகேஷன் தேர்வு செய்தேன்' என்று மன நிறைவுடன் கூறினார். இந்த செய்தி தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.