
வட இந்தியாவில் இந்து மதத்தினரின் புத்தாண்டு தினமான நவ சம்வத்ஸர் விழா நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. ராஜஸ்தானில் உள்ள கரௌலி நகரில், இஸ்லாமியர்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில், இந்து மதத்தினர் சிலர் புத்தாண்டை கொண்டாடும் வகையில் பைக் பேரணி நடத்தியுள்ளனர். அதில் காவிக்கொடிகளுடன் கரெளலி நகரில் பைக்கில் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
மேலும் இஸ்லாமிய மத வழிப்பாட்டு தளம் அருகே பேரணி வரும் போது, இந்து மதத்தினர் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தோடு, ஸ்பீக்கரில் பாடல்களை இசைத்தவாறு இஸ்லாமிய மத வழிபாட்டுத்தளம் அமைந்துள்ள பகுதியை கடக்க முற்பட்டனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, அந்தப் பகுதியில் இந்து - முஸ்லிம் மக்களிடையே மோதல் வெடித்து, அது கலவரமாக மாறியது.
பைக்குகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், கரெளலியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த வன்முறையில் நான்கு போலீஸார் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், வன்முறை தொடர்பாக இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கலவரத்தில் அந்தப் பகுதியில் ஏராளமான கடைகள் எரிக்கப்பட்டன. அப்போது, சுற்றிலும் வீடுகள் எரிந்துகொண்டிருக்க காவலர் ஒருவர் , நெருப்பில் மாட்டிக்கொண்ட குழந்தை ஒன்றை துணியால் சுற்றி வாரி அணைத்தபடி மீட்டார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், போலீஸ் அதிகாரி சுகிர்தி மாதவ் மிஸ்ரா என்பவர் இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவையும், புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். ``ராஜஸ்தான் போலீஸ் நேத்ரேஷ் சர்மா என்பவர் விலைமதிப்பற்ற ஒரு உயிரை காப்பாற்றியிருக்கிறார். இந்த ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு அர்த்தமுள்ளது'' என பதிவிட்டிருக்கிறார்.