
உத்திர பிரதேச மாநிலத்தின் புதாவுன் எனும் இடத்தில் உள்ள அரசு பள்ளியில் சிறுமி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆரம்ப பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மதுவின் ஐந்தாவது குழந்தை
சம்பந்தப்பட்ட சிறுமியின் ஆதார் அட்டையில் அவரின் பெயர்- மதுவின் ஐந்தாவது குழந்தை என்பதை குறிக்கும் வகையில் "Madhu ka Panchwa Baccha" என அச்சிடப்பட்டு இருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமியின் ஆதார் அட்டையில், ஆதார் எண் இடம்பெறவே இல்லை என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக உத்திர பிரதேச மாநிலத்தின் பில்சி டெசில் பகுதியை அடுத்த ராய்பூர் கிராமத்தில் வசிக்கும் தினேஷ் என்பவர், தனது மகள் ஆர்த்தியை பள்ளியில் சேர்க்க அதே பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு சென்றார். ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்த்தியின் ஆதார் அட்டை கொடுக்க வலியுறுத்தி இருக்கின்றனர். பின் ஆர்த்தியின் ஆதார் அட்டையை தினேஷ் அங்கிருந்த ஆசிரியர்களிடம் கொடுத்தார்.
ஆதார் எண் மாயம்:
ஆதார் அட்டையை பார்த்த ஆசிரியர்கள், அதில் ஆர்த்தியின் பெயருக்கு பதில் - மதுவின் ஐந்தாவது குழந்தை என அச்சிடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ந்து போயினர். மேலும் அந்த அட்டையில் ஆதார் எண் இடம்பெறவே இல்லை என ஆசிரியர்கள் தினேஷிடம் கூறி இருக்கின்றனர். ஆதார் அட்டையில் பெயர் தவறாக உள்ளது, ஆதார் எண் இடம்பெறவில்லை என்ற காரணங்களை கூறி ஆர்த்திக்கு ஆரம்ப பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
விளக்கம்:
"ஆதார் அட்டைகள் அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளால் உருவாக்கப்படுகின்றன. அவர்களின் அலட்சியம் காரணமாகவே இந்த தவறு ஏற்பட்டது. வங்கி மற்றும் அஞ்சல் அலுவலக அதிகாரிகளிடம் கவனமாக பணியாற்ற உத்தரவிடுகிறோம். இதுபோன்ற அலட்சியத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என மாவட்ட நீதிபதி தீபா ரஞ்சன் தெரிவித்தார்.