
குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேலுக்கு முக்கியத்துவம் இல்லாத துறைகள் கொடுக்கப்பட்டதால், அவர் அதிருப்தியில் இருந்து வந்தார். பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா தலையிட்டு பேசி சமாதானம் செய்ததையடுத்து, அவர் அமைச்சகப் பொறுப்புகளை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 182 இடங்களில் 99 தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அதிருப்தி
இந்நிலையில், துணை முதல்வர் நிதின் படேலுக்கு அமைச்சகப் பொறுப்புகள் ஒதுக்கப்பட்ட நிலையிலும், அவர் இன்னும் அலுவலகத்துக்கு வந்து பொறுப்புக்களை ஏற்கவில்லை. துணை முதல்வராக இருந்தும் தனக்கு ஒதுக்கப்பட்ட முக்கியத்துவம் இல்லாத துறைகளால் மிகுந்த அதிருப்தியில் அவர் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிளவு
கடந்த அரசில் இவர் வசம் இருந்த நிதி, பெட்ரோகெமிக்கல், நகர ேமம்பாடு ஆகிய பறிக்கப்பட்டு, முக்கியத்துவம் இல்லாத சாலை மற்றும் கட்டிடம், நர்மதா, சுகாதாரம், மருத்துவக்கல்வி மற்றும் மூலதன திட்டம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன. இதனால், துணை முதல்வர் நிதின் படேல் மிகுந்த அதிருப்தியில் இருந்தார். அமைச்சகபொறுப்புகளையும ஏற்காமல் நிதின் படேல் இருந்து வந்தார். இதனால், கட்சி மேலிடம் தலையிட்டு சமாதானம் செய்ய வேண்டும் என மாநிலத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
2-ம் இடம்
இதையடுத்து, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா தொலைபேசி மூலம், துணை முதல்வர் நிதின் படேலுடன் சமாதானம் பேசினார். அமைச்சரவையில் தங்களுக்கு 2-ம் இடம் கொடுக்கப்படும்.
அதில் மாற்றம் இருக்காது என நிதின் படேலிடம், அமித் ஷா உறுதி யளித்தார். இதனால் சமாதானமடைந்த நிதின் படேல், அமைச்சக பொறுப்புகளை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா சமாதானம்
இது குறித்து துணை முதல்வர் நிதின் படேல் நிருபர்களிடம் நேற்று கூறுகையில் “ கட்சியின் தலைவர் அமித் ஷா இன்று காலையில் என்னை தொடர்பு கொண்டு பேசினார். குஜராத் அரசில் 2-ம் இடம் தரப்படும், என்னுடைய தகுதிக்கு தகுந்த துறைகள் ஒதுக்கித் தரப்படும், அமைச்சரவையிலும் உரிய முக்கியத்துவம் தரப்படும் என உறுதி அளித்தார். என்னை அமைச்சகப் பொறுப்புகளை ஏற்க அமித் ஷா கேட்டுக்கொண்டார்.
உரிய பொறுப்பு
முதல்வர் விஜய் ரூபானி விரைவில் ஆளுநர் ஓ.பி. கோலியைச் சந்தித்து, அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்த கடிதத்தை அளிப்பார். எனக்குரிய மதிப்புகளையும், உரிய துறைகளையும் ஒதுக்கிகொடுக்காவிட்டால், அமைச்சரவையில் இருந்து என்னை நீக்கிவிடுங்கள் என்று கட்சித் தலைமையிடம் தெரிவித்துவிட்டேன். கட்சிக்காக ஒழுக்கமாகவும், விஸ்வாசமாகவும் உழைத்தவன் ’’ என்று தெரிவித்தார்.
மழுப்பல்
ஆனால், தனக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி அல்லது நகர மேம்பாடு ஒதுக்கப்படுமா அல்லது இப்போது ஒதுக்கப்பட்ட துறைகளிலேயே நிதின் படேல் பதவி ஏற்பாரா என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை.
இந்த முறை குஜராத் அரசில் நிதித் துறை அமைச்சகம் சவுரவ் படேலுக்கும், நகர மேம்பாட்டு துறையை முதல்வர் விஜய் ரூபானிக்கும் ஒதுக்கப்பட்டது