
ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய படை தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எல்லைப்பகுதியில் தொடர்ந்து இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன.
ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நேற்றுமுன்தினம் இந்திய படையின் தயார்நிலை மற்றும் மாநிலத்தில் பாதுகாப்பு நிலை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் 1 மணியளவில் அவந்திபோரா பகுதியில் உள்ள 185 சி.ஆர்.பி.எப். பட்டாலியன் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இது குறித்து போலீஸ் டி.ஜி.பி. எஸ்.பி. வைத் நிருபர்களிடம் கூறுகையில், “ ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாம் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
உடனே ராணுவம் தரப்பில் திருப்பிக் தாக்கி பதிலடி தரப்பட்டது. இரு தரப்புக்கும் கடுமையாக நடந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 3 காயமடைந்தனர். அதேசமயம், ராணுவ வீரர்களின் பதில் தாக்குதலில் 3 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்’’ என்று தெரிவித்தார்.
2017ம் ஆண்டில் மட்டும் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 881 எல்லை மீறி தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் இது மிகவும் அதிகமாகும். சர்வதேச எல்லைக் கோட்டு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதமக்கள் 34 பேர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் டிசம்பர் 10-ந்தேதி வரை 771 முறை எல்லை மீறி தாக்குதல் நடத்தியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.