
உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் ஆத்திரத்துடன், கோபத்துடன் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் வீரர்களுக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும் என இந்தி திரைப்பட உலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தனது பிறந்தநாள் விழாவில் தெரிவித்தார்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபம் அமிதாப் பச்சனுக்கு நேற்று 74-வது பிறந்தநாளாகும். மும்பையில் நடந்த விழாவில் அவர் தனது பிறந்த நாளை அமிதாப் பச்சன் கொண்டாடினார். அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி அளித்தார்.
சமீபத்தில் நடந்த உரி தாக்குதல் தொடர்பாக இந்தியாவில் நடித்து வரும் பாகிஸ்தானிய கலைஞர்களுக்கு தடைவிதித்து அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துபோது, பாலிவுட்டில்இரு பிரிவாக பிரிந்து சிலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
அது குறித்து அமிதாப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ உங்களை இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன், இதுபோன்ற கேள்விகள் கேட்க இது சரியான நேரம் இல்லை. யார் சொன்னது?, என்ன சொன்னார்கள்?, ஏன்?, எங்கு?, எப்படி சொன்னார்கள்? என்ற கேள்விகளை என்னிடம் கேட்பது சரியல்ல என நினைக்கிறேன். உரி தாக்குதலாலும், எல்லை ஓரத்தில் நடக்கும் சம்பவத்தாலும் நாட்டு மக்கள் கொந்தளித்து, கோபமாக இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் நாம் நமது வீரர்களுக்கு, நமக்காக தங்கள் உயிரை தியாகம் செய்து, நம்மை காத்து வரும் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக இருந்து நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இது குறித்து தான் நாம் கேள்வியை முன் வைக்க வேண்டும்'' என்றார்
உரிதாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் இந்தியாவில் நடிக்க ராஜ் தாக்ரே எதிர்ப்பு தெரிவித்தார். உரி தாக்குதலுக்காக ஒருநாட்டைச் சேர்ந்த நடிகர், நடிகையர் தடை செய்யப்பட வேண்டுமா என நிருபர்கள் கேட்டபோது அதற்கு அமிதாப் பதில் அளிக்கையில், “ இந்த கேள்விக்கு முன்பே பதில் அளித்து விட்டேன். அனைத்து கலைஞர்களையும் நான் மதிக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே 74-வது பிறந்தநாள் விழா கொண்டாடிய அமிதாப் பச்சனுக்கு நாடுமுழுவதும் நேற்று வாழ்த்துக்கள் குவிந்தன. பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில், “ அன்புள்ள அமிதாப், உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் பல்துறை திறமையும், பணிவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. உங்களின் நீண்ட ஆயுளுக்கு பிரார்த்திக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.
மேலும், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு, நடிகர் அர்ஜூன் ராம்பால், நடன இயக்குநர் பரா கான், இயக்குநர் ராம் கோபால் வர்மா உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.