கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. மே 13ஆம் தேதி தேர்தல்முடிவுகள் வெளியாகிறது.
கர்நாடகா மாநிலத்தில் தற்போதுதான் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி நேற்று கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரோடு ஷோ நடத்தி இருந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுவரை 17 முறை கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு, தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறார்.
களத்தில் முக்கியமாக பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் உள்ளன. பாஜகவில் சீட் கிடைக்காத அதிருப்தி தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளனர். இதனால், காட்சிகளும் மாறி, களம் சூடுபிடித்துள்ளது. தலைவர்கள் கட்சி தாவினாலும், தங்களுக்கு கிடைக்கும் வாக்குகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று பாஜக கூறி வருகிறது. காங்கிரஸ் கட்சியோ ஆளும் பாஜகவின் லஞ்ச ஊழலை அஸ்திரமாக எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூனே கார்கே என்று தலைவர்கள் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் எடிட்டர் அஜித் ஹனமக்கனவர் மற்றும் ஏசியாநெட் நியூஸ் எக்சிகியூடிவ் சேர்மன் ராஜேஷ் கல்ரா இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நேர்காணல் நடத்தினர். அவர்களது பல்வேறு கேள்விகளுக்கு அமித் ஷா அளித்த பதில்களை இங்கே பார்க்கலாம்.
1. ஏசியாநெட் கேள்வி: இந்த முறை தேர்தல் களம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அமைச்சர் அமித் ஷா: தேர்தல் களம் மிகவும் நன்றாக உள்ளது. இரண்டரை மாதங்களில் இன்று 17வது முறை கர்நாடகா வந்துள்ளேன். கிட்டத்தட்ட கர்நாடகா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவிட்டேன். பெரும்பாலான மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். அனைத்துப் பகுதிகளையும் கவர் செய்துவிட்டேன். இந்த முறை பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்.
கேள்வி 2: ஒவ்வொரு பாஜக தலைவர்களும் அறுதிப் பெரும்பான்மை பற்றி நிறைய பேசுகிறார்கள். இது எங்களுக்கு புரியவில்லை. எடியூரப்பாவை முதல்வராக்க 2013-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், 2018-ல் காங்கிரசுக்கு எதிராக தேர்தல் களம் இருந்தது. இந்தத் தேர்தலில் பிரச்சினை குறைவாக இருப்பதாகத் தெரிகிறது?
அமித் ஷா: நீங்கள் இதை நுண்ணிய கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள், நாங்கள் பாரம்பரிய தேர்தல் பகுப்பாய்வு முறைகளில் பார்க்கிறோம். மோடிஜியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும் புதிய சாதி உருவானது. அதுதான் பயனாளர்களின் சாதி. கர்நாடகாவில் 4.10 லட்சம் பேருக்கு வீடு கிடைத்துள்ளது. அவர்களில் சிலரைச் சந்தித்தேன். 7 தலைமுறைக்குப் பிறகு எங்களுக்கு குடியிருக்க வீடு கிடைத்துள்ளது என்று தெரிவித்தனர். அவர்கள் குறிப்பாக பஞ்சாரா இன மக்கள். கர்நாடகாவில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 43 லட்சம் குடும்பங்கள் முதல் முறையாக குழாய் நீரை பெற்றுள்ளன. சுத்தமான குழாயிலிருந்து தண்ணீர் கிடைத்தது. கர்நாடகாவில் 70 ஆண்டுகளாக கழிவறை இல்லாத 48 லட்சம் குடும்பங்கள் இருந்தன. கிசான் சம்மன் நிதியின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 54 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.10,000 எந்த கமிஷனும் இல்லாமல் நேரடியாக மாற்றப்படுகிறது. கர்நாடகாவில் 37 லட்சம் பெண்கள் காஸ் சிலிண்டர்களைப் பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1.38 கோடி பேருக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ள தகவலை நீக்கினாலும், கர்நாடகாவின் 2 கோடி மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர். கர்நாடகாவில் சுமார் 3 கோடி மக்கள் ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ தானியங்களை இலவசமாகப் பெறுகிறார்கள். சமூகத்தை நுண்ணிய அளவில் பார்க்கும்போது, லிங்காயத், முஸ்லிம், தலித், ஓபிசி எனப் பார்க்கிறீர்கள்.
காங்கிரஸ் முகமே இல்லாத கட்சி... வாக்குறுதிகளுக்கு உத்தரவாதம் கிடையாது! அமித் ஷா விமர்சனம்
கடந்த 9 ஆண்டுகளில் பாஜக பல புதிய பகுதிகளில் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று வருகிறது. மணிப்பூரில் எங்களுக்கு 0.3% வாக்குகள் இருந்தன. இன்று முழு பெரும்பான்மை பெற்று, 50% வாக்குகளுடன் ஆட்சி அமைத்துள்ளோம். 37% சிறுபான்மையினர் இருக்கும் அசாமில், அவர்களது வாக்கு எங்களுக்கு கிடைக்காது என்று நம்பினோம். ஆனால், இன்று இரண்டு சிறுபான்மையினர் எம்எல்ஏக்களைப் பெற்று பெரும்பானமையுடன் ஆட்சி அமைத்து இருக்கிறோம். திரிபுராவில் 27 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் அரசு இருந்தது. நாங்கள் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளோம். உத்தரப்பிரதேசத்தில் 30 முதல் 35 எம்எல்ஏக்கள் இருந்தோம். நான் பேசும்போது, வீடு, கழிப்பறை, எரிவாயு வசதி பெற்றவர்கள் எனது பேச்சுக்கு கைதட்டினர். அதிக பயனாளிகள் இருப்பதையே இது காட்டுகிறது. தற்போதைய போட்டி வேறுமாதிரி அமைந்து இருக்கிறது.
கேள்வி 3: கர்நாடகாவில் வளர்ச்சி என்பது கேள்விக்கு உள்ளாகி இருக்கிறதா?
அமித் ஷா: பல பிரச்சினைகள் உள்ளன. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் இங்குள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலகில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், அவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விண்வெளியில் நாம் பெற்ற வெற்றியால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏன் அவர்கள் காங்கிரசுக்கு ஓட்டு போடுவார்கள்?
கேள்வி 4: கர்நாடக வாக்காளர்கள் ஆட்சி அதிகாரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்களா?
பதில்: அப்படி இல்லை. இங்கு ஜனதா தளம் அரசு பலமுறை ஆட்சி செய்துள்ளது. காங்கிரஸ் அரசு தொடர்ந்து நான்கு முறை இங்கு வந்துள்ளது.
கேள்வி 5: நீங்கள் கூறியுள்ள புள்ளி விவரங்களை, கர்நாடகாவின் எந்தத் தலைவரும் பேசவில்லை. இங்கே நாம் சில வித்தியாசமான சிக்கல்களைப் பார்க்கிறோமா?
அமித் ஷா: இல்லை, அப்படி இல்லை. ஒரு சட்டமன்றத்தின் ஒவ்வொரு தலைவரும் தனது பகுதி பயனாளிகளின் முழு தரவுகளையும் எடுத்துக்கொள்கிறார். நான் 17 சட்டசபை கூட்டங்களை நடத்தினேன். அனைவரிடமும் முழு விவரங்களும் உள்ளன. எங்கள் பொறுப்பாளரிடம் பூத் வாரியான தரவு உள்ளது.
கேள்வி 6: லிங்காயத் வாக்கு வங்கி பதற்றமா?
அமித் ஷா: பதற்றம் இல்லை. லிங்காயத்துகளுக்கு வாக்களிக்கும் காங்கிரஸ் என்ன செய்தது. 70 ஆண்டுகளில் இரண்டு லிங்காயத் முதல்வர்களை மட்டும் கொடுத்து அவமானப்படுத்தி விரட்டியடித்துள்ளது காங்கிரஸ். ஒன்று இந்திரா காந்தியாலும் மற்றொன்று ராஜீவ் காந்தியாலும் விமான நிலையத்திலேயே தூக்கி எறியப்பட்டனர். நமது முதலமைச்சரும் லிங்காயத் தான். எடியூரப்பா போன்ற தலைவர்கள் எங்களிடம் உள்ளனர். லிங்காயத்துகள் பற்றி எங்களுக்கு பதற்றம் இல்லை
கேள்வி 7: எடியூரப்பா தானே விலகிவிட்டாரா அல்லது நீக்கப்பட்டாரா? கேள்வி இதுவல்ல. ஆனால் இது தவறான முடிவு என்று நீங்கள் நினைக்கவில்லையா?
அமித் ஷா: முற்றிலும் இல்லை. 75 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு கட்சி விதிப்படி என்னை நீக்கிவிடலாம் என எடியூரப்பாவே என்னிடம் கூறியிருந்தார். அந்த நேரத்தில் நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
கேள்வி 8: நீங்கள் நினைக்கிறீர்களா; மாற்றத்தின் நோக்கம் எட்டப்பட்டதா?
அமித் ஷா: நோக்கம் மாறவில்லை. எங்கள் கட்சியில் முதல்வர் ஆனதால் மட்டும் பங்களிக்க முடியாது. தேர்தலில் போட்டியிடாத ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் எங்கள் கட்சியின் பெரிய தலைவர்கள். தேசியத் தலைவராக இருந்த குஷாபாவ் தாக்கரே ஜி தேர்தலில் போட்டியிடவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலில் போட்டியிடாத நூற்றுக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். அதற்காக அவர்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை என்று அர்த்தமில்லை. எடியூரப்பாவே சட்டமன்றத்தில் காங்கிரஸார்களிடம் சொல்லியிருந்தார், ''சந்தோஷப்படாதீர்கள்''. இந்த முறை உங்களை தோற்கடிப்பேன், அடுத்த முறையும் உங்களை தோற்கடிக்க வருவேன்'' என்று கூறியிருந்தார். எடியூரப்பா தேர்தலை உற்சாகத்துடன் வழி நடத்துகிறார்.
கேள்வி 8: லட்சுமண் சாவடி, ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற தலைவர்கள் கட்சியில் இருந்து விலகிச் சென்றது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: இருவருமே 30,000 வாக்குகளுக்கு மேல் தோல்வியைச் சந்திப்பார்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன். வாக்குகள் எண்ணிய பின்னர் என்னை நீங்கள் அழைக்கலாம். 1990களில் இருந்தே ஹூப்ளி வாக்குகள் அமைப்பு பற்றி எனக்குத் தெரியும். தனி நபருக்கு வாக்குகள் அளிக்க மாட்டார்கள். கட்சிக்குத் தான் அளிப்பார்கள்.
சமூக நீதியைக் காப்பாற்றவே, காங்கிரஸ் செய்த தவறை திருத்துகிறோம்! அமித் ஷா அதிரடி
கேள்வி 9: ஹூப்ளி சென்ட்ரலில் ஜெகதீஷ் ஷெட்டர் தோற்பாரா அல்லது வெற்றி பெறுவாரா என்பதல்ல கேள்வி. மீதமுள்ள சட்டமன்ற தொகுதி வாக்காளர்களிடமும் பிரதிபலிக்கும் இல்லையா?
அமித் ஷா: அப்படி இல்லை. ஒருவருக்கு எம்.எல்.ஏ., துணை முதல்வர் மற்றும் பல பெரிய பதவிகள் வழங்கப்பட்டதை வாக்காளர்களும் அறிவர். ஒரு பாஜக தொண்டர் சுயநலம் இல்லாமல் சித்தாந்தம் கொண்டவராக இருந்தால், அவர் எப்படி காங்கிரஸில் சேர முடியும். சொந்த நலனுக்காக அரசியல் செய்யும் போது தான் போக முடியும். ஒருவரை எக்ஸ்போஸ் செய்யும்போது போக முடியும். பத்திரிக்கையாளர்கள் போல் இல்லைமக்கள் அதையும் பார்க்கிறார்கள். மக்கள் தனிப்பட்ட மனிதரின் குணநலன்களையும் பார்க்கிறார்கள்.
கேள்வி 10: என்ன தவறு நடந்தது? தகவல் தொடர்பு பிரச்சனையா?
அமித் ஷா: நீங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கட்சி முடிவு செய்துள்ளது. இந்த முறை கட்சிக்காக நீங்கள் உழைக்க வேண்டும் என்று நானே அவரிடம் கூறினேன். அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தடுமாற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை. பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அது ஒன்றும் பிரச்சனை இல்லை.
கேள்வி 11: காங்கிரஸில் ஷெட்டர் இணைந்தவுடன், அவர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது. ஏதோ பெரிய அதிகாரம் கிடைத்ததைப் போல உணர்ந்தார்களே?
அமித் ஷா: இது அவர்களின் பிரச்சினை. அவர்களுக்கு தலைமை இல்லை. பாஜகவில் இருந்து யாரேனும் இணைந்தால்தான் அவர்கள் வெற்றி பெறுவார்கள். இது தெளிவாகிவிட்டது. தேர்தலின் தொடக்கத்திலேயே அவர்களுக்கு தெரிந்துவிட்டது. அவர்களது தலைமையால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று. ஜெகதீஷ் ஷெட்டர், சாவடி வருகை அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் என்று நம்பினார்கள். அதாவது தனித்து வெற்றி பெற முடியாது. பொம்மை தலைமையில் அமைச்சர் ஆக மாட்டேன் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதால், கட்சி மேலிடம் முடிவெடுத்தது.
கேள்வி 12: நீங்கள் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளின் பட்டியலைப் படித்துக்கொண்டிருந்தீர்கள், ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வன்முறை ஏற்படும் என்று மக்களை தூண்டுவதாக உங்கள் மீது காங்கிரஸ் புகார் பதிவு செய்துள்ளது. இது அமித் ஷா ஜிக்கு தேவையா?
அமித் ஷா: இல்லை. சகோதரரே, நான் பயப்படவில்லை, ஆனால் நான் உண்மையைச் சொல்கிறேன். இந்த நாட்டின் வகுப்புவாத வழக்குகளின் வரலாற்றைப் பாருங்கள். இதுபோன்ற 90% வழக்குகள் காங்கிரஸ் ஆட்சியில் நடந்துள்ளன. நீங்கள் புள்ளிவிவரங்களையும் படிக்க வேண்டும். 90 சதவீதம் என்பது அவர்களது ரெக்கார்டு. பொதுமக்களிடம் அவர்களது ரெக்கார்டு குறித்து பேசுகிறேன். யாருக்கும் பயமில்லை. நான் எச்சரிக்கவில்லை, நான் உங்களுக்கு சொல்கிறேன்.
கேள்வி 13: அந்த புகார் பற்றி என்ன கூறுவீர்கள்?
பதில்: இந்த புகார் யாருக்கு முன் வைக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரசபை தீர்மானிக்க வேண்டும். என்னைக் கேட்டால், என் எண்ணம் என்ன என்று பதிலளிப்பேன்.
கேள்வி 14: காங்கிரஸுக்கு அதன் உத்தரவாதத் திட்டங்கள் மீது நம்பிக்கை உள்ளது, ஐந்தாவது உத்தரவாதத்தை ராகுல் காந்தி கொடுத்துள்ளார். இதற்கு நீங்கள் என்ன கூறுவீர்கள்?
அமித் ஷா: குஜராத், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், அசாம், மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இந்த உத்தரவாதத் திட்டங்களை கொடுத்தனர். இன்னும் சிறந்த உத்தரவாத திட்டங்கள் இருந்தன. இமேஜ் இல்லாத கட்சியின் உத்தரவாதத்தை யார் நம்புவார்கள்?
கேள்வி 15: குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.2000, இலவச மின்சாரம் வழங்கப்படும்... இப்படிப்பட்ட சலுகைகளைப் பார்த்து மனம் ஏமாறவில்லையா?
அமித் ஷா: இல்லவே இல்லை. வாக்காளர்களுக்கு ஏற்கனவே இலவச கழிப்பறை, இலவச காஸ் சிலிண்டர், கட்டணம் இன்றி மின் இணைப்பு, ஒரு லட்சம் ரூபாய்க்கு வீடு கிடைத்துள்ளது. அவரது வீட்டிற்கு இலவச உணவு வருகிறது. விவசாயி ஆண்டுக்கு ரூ.10,000 கிசான் சம்மன் நிதியைப் பெறுகிறார். வாக்காளர்களுக்கு ஏற்கனவே அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் தடைபடும் என்பது அவர்களுக்குத் தெரியும். 2000 ரூபாயை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள். இதில் லாஜிக் இல்லை, ஏழைக்கு எல்லாம் புரியும். தேவையின் விளிம்பில் இருப்பவர்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்கின்றனர்.
கேள்வி 16: இங்கே காங்கிரஸ் தலைவர்கள் மோடி ஜியின் அறிக்கையை விமர்சிக்கிறார்கள், கேலி செய்கிறார்கள். கர்நாடகாவில் 40 சதவீத ஊழல் குற்றச்சாட்டுகள் உங்கள் அரசு மீது உள்ளதா? அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
அமித் ஷா: எந்த நீதிமன்றத்திலும், எந்த இடத்திலும் ஒரு ஊழல் வழக்கு நடந்திருந்தால், சொல்லுங்கள். ஒருமுறை பாஜக எம்எல்ஏவின் மகன் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி சிறைக்கு அனுப்பியபோதும் தேர்தல் சீட்டு வழங்கப்படவில்லை. குழப்பம் மற்றும் வதந்திகளைப் பரப்புவது எளிது. ஆனால் மக்கள் அவற்றையெல்லாம் நம்ப மாட்டார்கள்.
கேள்வி 17: வளர்ச்சியில் இவ்வளவு நம்பிக்கை இருந்தால் இடஒதுக்கீடு தொடர்பான முடிவு ஏன் அவசரமாக எடுக்கப்பட்டது?
அமித் ஷா: அவசரப்படவில்லை. மாறாக முடிவுகள் தாமதமாகவே எடுக்கப்பட்டன. இந்த நாட்டின் அரசியலமைப்பு மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அங்கீகரிக்கவில்லை. மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீடு கிடைத்தால், அதை ரத்து செய்ய வேண்டும். அதைத்தான் செய்தோம். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்தால், அதை பரிசீலிக்கும். இடஒதுக்கீடு எடுப்பதும் கொடுப்பதும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவிலும் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை இருந்தால், அதை காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் சொல்லட்டும். சொல்ல முடியாவிட்டால், அது எந்த அடிப்படையில் செய்யப்பட்டது என்பதை அவர்கள் நியாயப்படுத்த வேண்டும். நாங்கள் திருத்தங்களைச் செய்துள்ளோம். தெலுங்கானாவிலும் அரசியல் சட்டத்திற்கு முரணான முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்தும் சிந்திப்போம். முஸ்லிம் சமூகம் ஓபிசியில் இடஒதுக்கீடு பெற வேண்டும். முஸ்லிம் என்றோ இந்து என்றோ சொல்லி இடஒதுக்கீடு வழங்கக்கூடாது. ஒரு சமூகம் பிற்படுத்தப்பட்டால் இடஒதுக்கீடு பெற வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் அல்லது இந்துக்கள் என்று எப்படி இடஒதுக்கீடு கொடுக்க முடியும்... நாளை ஒரு அரசு வந்து அனைத்து இந்துக்களுக்கும் இடஒதுக்கீடு கொடுத்தால் அது நடக்குமா? அதை எப்படி செய்தார்கள் என்பதை நீங்கள் காங்கிரஸிடம் கேட்க வேண்டும்.
கேள்வி 18 - சித்தராமையா ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை 70% உயர்த்துவார்களா?
அமித் ஷா: இப்படி எதுவும் நடக்காது என்று உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளின் தீர்ப்பு இருப்பது உங்களுக்கும் தெரியும். இதில் சித்தராமையாவை யார் நம்புவார்கள்? கோபத்தில் இப்படியெல்லாம் சொல்லி இருக்கிறார்.
கேள்வி 19: கார்கேவின் அறிக்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? மோடியை விஷப்பாம்பு என்று அழைத்தாரா?
அமித் ஷா: கார்கேஜி மட்டுமல்ல, அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் மோடி ஜிக்கு எதிராகப் பேசி வருகின்றனர். அவர்கள் கீழ்த்தரமான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் சோனியா ஜி மோடியை மரண வியாபாரி (மௌத் கா சவுதாகர்) என்றும் அழைத்தார். மோடியை தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரர் என்று பிரியங்கா வர்ணித்தார். காங்கிரஸ் எம்.பி ஹரிபிரசாத், மணிசங்கர் அய்யர் மற்றும் இப்போது கார்கே ஆகியோர் மோடி ஜி மீது சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டனர். ஆனால் அவர்கள் அதைச் செய்தபோதெல்லாம் அந்தத் தேர்தலில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுள்ளோம். நான் அதை ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கிறேன். அவரும் அந்த அறிக்கையை தற்போது வாபஸ் பெற்றுள்ளா
கேள்வி 20: தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் குறைவாக உள்ளதா? சீட்டு கிடைக்காததால் தலைவர்கள் கோபமா?
அமித் ஷா: இல்லை அப்படி இல்லை. நான் அங்கு சென்றிருந்தேன், யாதகிரி, சக்லேஸ்புராவில் இப்படியொரு ரோட்ஷோவை நினைத்திருக்க முடியாது. சீட் கிடைக்கவில்லை என்பதெல்லாம் மிகவும் சாதாரணமானது. எல்லாக் கட்சிகளிலும் நடப்பதுதான். காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடும் கோபம் உள்ளது. அங்கே சித்தராமையா போன்ற பெரிய தலைவர்கள் கூட கோபப்படுகிறார்கள்... இது சாதாரண விஷயம் இல்லையா?
கேள்வி 21: தேர்தலின் போது மோடியை பாஜக ஏன் திரும்பத் திரும்பக் கொண்டுவருகிறது என்று காங்கிரஸ் கேட்கிறது. இது மாநிலத் தேர்தல், பொதுத் தேர்தல் இல்லையே?
அமித்ஷா: ஜனநாயகத்தில் தேர்தல் என்பது ஒரு பெரிய கொண்டாட்டம். நரேந்திர மோடி நாட்டின் பிரதமர், தேர்தல் நேரத்தில் அவர் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்ல வேண்டும். பொதுக்கூட்டம் நடத்த முடியாத மன்மோகன் சிங்குடன் காங்கிரசுக்கு பழகி விட்டது. மோடி ஜியின் பேச்சு கேட்க மக்கள் வரும்போது நாம் என்ன செய்ய முடியும். மன்மோகன் சிங்கின் பேச்சைக் கேட்க யாரும் வருவதில்லை, அதனால் அவர் செல்வதில்லை.
கேள்வி 22: அபிவிருத்தி பற்றி பேசுகிறோம், ஆனால் இங்கு பல பகுதிகளில் தண்ணீர் இல்லை?
அமித் ஷா: தண்ணீர் பிரச்சனை எல்லாம் விரைவில் சரியாகிவிடும். இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க பிராந்தியக் கட்சி வர வேண்டும் என்று ஜேடி(எஸ்) கூறியதற்கு பதிலளித்த ஷா, “இரண்டு மாநிலங்களுக்கு இடையே தகராறு இருக்கும்போது, அந்தப் பிரச்சனையை பிராந்தியக் கட்சி எவ்வாறு தீர்க்க முடியும்? ஜே.டி.எஸ்-க்கு வாக்களிப்பது என்பது காங்கிரஸுக்கு வாக்களிப்பது என்று கர்நாடக மக்களுக்கு தெரியும். ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் நாங்கள் செல்ல மாட்டோம்.
கேள்வி 23: பெங்களூருவில் மழை பெய்தால், வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்படுகிறது. இது கட்டமைப்பு பிரச்சனையா?
அமித்ஷா: பெங்களூரில் உள்கட்டமைப்பு மேம்பாடு நடந்திருக்க வேண்டிய விதம் நடக்கவில்லை, ஆனால் அது மரபு சார்ந்த பிரச்சனை. மத்திய அரசின் 9 ஆண்டுகளையும், மாநில அரசின் 4 ஆண்டுகளையும் பார்க்க வேண்டும். இந்த ஒன்பது ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். மாநிலத்திற்கு இதுவரை 3,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மோடி வந்தபோது பெங்களூருவில் 7 கிமீ மெட்ரோ இருந்தது, இன்று 56 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் முதல் 100 கி.மீ மெட்ரோ பணிகள் 2024-ல் நிறைவடையும். செயற்கைக்கோள் சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும். மேம்பாலம், பாதாளச் சாக்கடை உள்ளிட்ட இதர வளர்ச்சிக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பெங்களூருவுக்கு மட்டும் 75 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளனர். பெங்களூருவின் வளர்ச்சிக்காக கடந்த 9 மற்றும் 4 ஆண்டுகளில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.
கேள்வி 24: பெங்களூர் நகரத்தைத் தவிர, பழைய மைசூர் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் உங்கள் செயல்திறன் ஏன் குறைவாக இருந்தது? இம்முறையும் கட்சி அங்கு போராடுவது போல் தெரிகிறதே?
அமித் ஷா: நாங்கள் போராடவில்லை, கடினமாக உழைக்கிறோம். இயற்கையாகவே, ஜே.டி (எஸ்) மற்றும் காங்கிரஸுக்கு இடையே மோதல் இருந்தது, ஆனால் நாங்கள் இந்த 4 ஆண்டுகளில் பூத் மட்டத்தில் அமைப்பை மேலும் பலப்படுத்தியுள்ளோம். மோடி ஜி மாண்டியாவில் பேரணி நடத்தினார். நாங்கள் அங்கு முழு கவனத்துடன் உழைக்கிறோம். இந்த முறை எங்கள் இடங்கள் அதிகரிக்கும் என நம்புகிறோம்.
கேள்வி 25: உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயங்களில் மோடி ஜி கடந்த 9 ஆண்டுகளில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்?
அமித் ஷா: ஒரு அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இது உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு பெரிய முடிவு. இதன் மூலம் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பலன் கிடைத்துள்ளது. எந்த அமைப்பும் நாட்டை உடைக்க முயன்றால் கண்மூடி இருக்க முடியாது. இப்போதைய சூழ்நிலையில் தடை விதிக்காதது நல்லது, இல்லையேல், "தேர்தல் காரணமாக பாஜகவினர் அதைச் செய்தார்கள்" என்று சொல்வார்கள். சில முடிவுகள் எப்போதும் தேர்தலை கருத்தில் கொண்டு எடுக்கப்படுவதில்லை, தேர்தல்கள் வரும், போகும்.
வட இந்தியாவில் வன்முறை 70 சதவீதம் குறைந்துள்ளது. 8,000 பேர் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர். ஒன்பது வெவ்வேறு பயங்கரவாத குழுக்கள் அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் கூட வன்முறை விகிதம் 6 சதவீதம் மட்டுமே. கல் வீச்சு சம்பவங்கள் தற்போது பூஜ்ஜியமாகிவிட்டன. பஞ்சாபிலும் என்ன நடந்தாலும், அங்குள்ள பஞ்சாப் அரசுடன் இணைந்து நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம். உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கேள்வி 26: சத்யபால் மாலிக்கின் அறிக்கைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அமித் ஷா: சத்யபால் மாலிக்கின் அறிக்கைகள் அவரது பதவிக்காலத்தில் பார்க்கப்பட்டால், அதற்கு நம்பகத்தன்மை இருக்கும். அந்த நேரத்தில் அவர் தேச விரோத செயல்களை பார்த்திருந்தால், அவர் ஏன் அந்த நேரத்தில் கருத்து தெரிவிக்கவில்லை? ஏன் இந்த தேசபக்தி பல வருடங்கள் கழித்து எழுந்தது?
கேள்வி 27: நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக நிறைய அரசியல் நடப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
அமித் ஷா: பதில் அப்படி இல்லை. நாட்டு மக்கள் அப்படி பார்க்கவில்லை. நாட்டு மக்களுக்கு உண்மை நிலை நன்றாகவே தெரியும். உள்நாட்டு பாதுகாப்பு நல்லது என்பது மக்களுக்கு தெரியும்.
கேள்வி 28: தேசிய பிரச்சனைகள் வேறு, மாநில பிரச்சனைகள் வேறு. தேசிய பிரச்சினையை மாநிலத்திற்கு கொண்டு வந்ததாக பாஜக மீது குற்றம் சாட்டப்பட்டு, தேர்தலை மோடி மையமாக மாற்ற நினைக்கிறார்களா?
பதில்: மோடி ஜி எங்கள் தலைவர். கண்டிப்பாக அவருடைய பிரபலத்தால் நமக்கு பலன் கிடைக்கும், ஆனால் பெங்களூருக்கு வழங்கப்பட்ட பட்ஜெட்டை சொல்லியிருக்கிறோம். இது தேசிய பிரச்சினை அல்ல. 5 கோடி பயனாளிகளின் பட்டியலைச் சொன்னேன், அவர்கள் வெளியாட்கள் அல்ல, கர்நாடகா மக்கள்.
கேள்வி 29: இந்தி மொழிக்கான தென்னிந்திய மாநிலங்களின் சிந்தனை பற்றி நீங்கள் என்ன கருத்து கூறுவீர்கள்?
பதில்: கன்னட மொழிக்காக யாரேனும் அதிகம் செய்திருந்தால் அது பாரதிய ஜனதா கட்சிதான். மோடி ஜி வந்த பிறகு யுபிஎஸ்சியில் கன்னடத்தில் தேர்வு முறை நடந்தது. தற்போது, CRPFல் அனைத்து மொழிகளுக்கும் முன்னுரிமை அளித்துள்ளோம். கன்னடத்தின் தாக்கத்தை அதிகப்படுத்தியுள்ளோம். அனைத்து பிராந்திய மொழிகளும் படிக்கப்பட வேண்டும், பேசப்பட வேண்டும் என்பதே எங்கள் முன்னுரிமை. பிரியங்கா காந்தி இங்கு வந்தால் எந்த மொழியில் பேசுவார்? திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் குஜராத்தில் இருந்து வருகிறேன், எனக்கு கன்னடம் தெரியாவிட்டால் இந்தியில் பேசுவேன். உள்ளூர் மொழியை வளர்க்க பாஜக செய்த அளவுக்கு, எந்தக் கட்சியும் செய்யவில்லை. கன்னடம், குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகளில் மருத்துவ படிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்டன.
கேள்வி 30: பாஜக முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், தற்போதைய முதல்வர் நீடிப்பாரா அல்லது மாறுவாரா?
அமித் ஷா: தற்போதைய முதலமைச்சரே தேர்தலை முன்னின்று நடத்துகிறார். தேர்தலுக்குப் பிறகு நிலைமை குறித்து கட்சி முடிவெடுக்கும்.
கேள்வி 31: கருத்துக்கணிப்பில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்?
அமித் ஷா: நான் தொண்டர்களை மிகவும் நம்புகிறேன். கருத்துக் கணிப்புகள் வெற்றியை காட்டுகின்றன. பெரும்பான்மை இல்லை என்ற கேள்விக்கே இடமில்லை. ஜேடிஎஸ் உடன் எந்த சமரசமும் இல்லை. ஜேடிஎஸ்க்கு வாக்களிப்பது என்பது காங்கிரஸுக்கு வாக்களிப்பதற்கு என்பதை மக்களுக்கு உணர்த்த விரும்புகிறேன்.