சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை மீட்டெடுப்போம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை மீட்டெடுப்போம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்குடன் பிரத்யேக பேட்டி அளித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நான்கு சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் கூறினார்.
கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது பற்றிப் பேசிய அமித் ஷா, பாஜக அரசு அந்த முடிவை அவசரத்தில் எடுக்கப்படவில்லை எனவும் மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். “இந்த முடிவு மிகவும் முன்னதாகவே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நாட்டின் அரசியலமைப்பு மதத்தின் அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை அங்கீகரிக்கவில்லை. மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அது ரத்து செய்யப்பட வேண்டும். நாங்கள் அதைத்தான் செய்தோம். நாங்கள் இந்த முடிவெடுப்பதற்குத் தாமதித்துவிட்டோம். ஒரு வருடத்திற்கு முன்பே இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்."
சமூக நீதியைக் காப்பாற்றவே, காங்கிரஸ் செய்த தவறை திருத்துகிறோம்! அமித் ஷா அதிரடி
சிலர் பாஜக அரசின் முடிவை அரசியல் ஆதாயத்துக்கான நடவடிக்கை என்று விமர்சிப்பது குறித்து கேட்டதற்கு பதில் கூறிய மத்திய உள்துறை அமைச்சர், "ஒதுக்கீட்டை அகற்றுவதாக இருந்தாலும் அல்லது கொடுப்பதாக இருந்தாலும்... இரண்டும் அரசியலமைப்பின்படி இருக்க வேண்டும். தேசம் முன்னேற வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். அது அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடக்கட்டும். காங்கிரஸ் தலைவர் ஒருவர் வந்து, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டு வழங்கும் ஒரு பகுதியை எனக்குக் காட்டட்டும். அவர்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால், அவர்கள் 4 சதவீத முஸ்லிம் இட ஒதுக்கீட்டுக்கான காரணத்தைக் கூறவேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
"நாங்கள் அவர்கள் செய்த தவறைத் திருத்தி இருக்கிறோம். முஸ்லீம் இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது. முஸ்லிம்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு பெறவேண்டும், எல்லா முஸ்லிம்களும் அல்ல. மற்ற மதத்தினருக்கும் இது பொருந்தும். பிற்படுத்தப்பட்ட எந்த பிரிவினரும் இட ஒதுக்கீடு பெறலாம். ஆனால் முஸ்லிம்களுக்கோ இந்துக்களுக்கோ இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறலாம் என்றால்... நாளை ஏதாவது ஒரு அரசு வந்து அனைத்து இந்துக்களுக்கும் இடஒதுக்கீடு அளித்தால் என்ன செய்வது? அப்படிச் செய்ய முடியுமா? முடியாது! இந்த இடஒதுக்கீட்டை எப்படி உருவாக்கினார்கள் என்று காங்கிரஸிடம்தான் கேட்க வேண்டும்” என்று அமித் ஷா கூறினார்.
ரத்து செய்த நான்கு சதவீத இடஒதுக்கீட்டை வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கு மறுஒதுக்கீடு செய்தது குறித்தும் அமித் ஷா கூறினார். "இதை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இந்த மூன்றும் ஒரே தொகுப்பாக இருப்பவை. நான்கு சதவீத முஸ்லிம் இட ஒதுக்கீடு நீக்கப்பட்டால், மற்ற இரண்டு பிரிவினரும் தானாகவே தலா இரண்டு சதவீதத்தைப் பெறுவார்கள். நாங்கள் எந்த இட ஒதுக்கீட்டையும் உயர்த்தவில்லை. அது இயல்பாகவே கூடியிருக்கிறது” என்று விளக்கினார்.
பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக பாஜக அரசு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் என்ற 2பி பிரிவில் 4 சதவீத முஸ்லீம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்து சமூகமத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலா 2 சதவீதம் இட ஒதுக்கீட்டை அதிகரித்தது. சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
முஸ்லிம் இட ஒதுக்கீட்டை நீக்கும் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்குப் பதிலளித்த மாநில அரசு, மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 முதல் 16 வரையான பிரிவுகளுக்கு முரணானது என்றும் வாதிட்டது.
கர்நாடகாவில் பாஜக அரசு ஏன் இந்த இடஒதுக்கீட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்ற மற்றொரு கேள்விக்கு பதில் கூறிய ஷா, "சமூக நீதியை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு இல்லையா? இடஒதுக்கீடு முடிவைத் தேர்தல் பார்வையில் இருந்து பார்க்கவேண்டிய அவசியம் என்ன? அது அரசாங்கத்தின் பொறுப்பு. முடிவு தாமதமாக வந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். முஸ்லிம் இடஒதுக்கீடு ஓராண்டுக்கு முன்பே நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மேலும் தாமதப்படுத்த வேண்டும் என்பதில் அர்த்தமில்லை" என்றார்.