
புதுடெல்லி, அக். 26-
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் தான் தயாநிதி மாறனின் சகோதரர் என்பதால் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என் மீதான குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது, முழுமைபெறாத ஒரு கட்டுக்கதை என சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் தரப்பில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று வாதம் வைக்கப்பட்டது.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை நிர்பந்தப்படுத்தி, அவரது பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்காக, மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து மொரீயஸ் நாட்டைச் சேர்ந்த வேறு நிறுவனங்கள் வழியாக சன் குழுமத்தில் ரூ.742.58 கோடி முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு (எஸ்டிடிபிஎல்) ரூ. 549.03 கோடி, சவுத் ஏசியா எப்.எப். நிறுவனத்துக்கு ரூ. 193.55 கோடி கோடி என ரூ. 742.58 கோடி சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி, எஸ்ஏஎப்எல் நிர்வாக இயக்குநர் கே.சண்முகம் மற்றும் எஸ்ஏஎப் எல், எஸ்டிடிபிஎல் ஆகிய இரு நிறுவனங்கள் என 6 பேர் மீது கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததது.
இவ்வழக்கு சிறப்பு சிபிஐ நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்நிலையில், சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நேற்று ஆஜராகி வாதத்தை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், “ தயாநிதி மாறன் சகோதரர் என்பதாலேயே கலாநிதி மாறன் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். தயாநிதி மாறன் சகோதரர் என்பதாலேயே அமலாக்கப்பிரிவு இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளது.
அதேபோல, கலாநிதி மாறனின் மனைவி காவேரியின் பெயரும் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. அமலாக்கப்பிரிவின் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு முழுமையில்லாத கட்டுக் கதையை தயாரித்துள்ளது'' என்று தெரிவித்தார்.
மேலும், ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் மொரிசீயஸ் நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக ரூ.742.58கோடி பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டியுள்ளதை கடுமையாக காலாநிதி மாறன் தரப்பில் எதிர்க்கப்பட்டது.
மேலும், இந்த ஒப்பந்தத்தில் வர்த்தகப் பரிமாற்றம் அனைத்தும், அரசு நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ்தான் நடந்தது. அப்படி இருக்கையில் எப்படி விதிமுறை மீறப்பட்டு இருக்கும் என கலாநிதிதரப்பில் கேள்வி முன் வைக்கப்பட்டது.
முன்னதாக அமலாக்கப்பிரிவு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.கே. மட்டா வாதிடுகையில், “ எஸ்.டி.டி.பி.எல். மற்றும் எஸ்.ஏ.எப்.எல். நிறுவனங்கள் சட்டவிரோதமாக ரூ.742.58 கோடியை மொரீசியஸ் நாட்டில் உள்ள சில நிறுவனங்கள் வாயிலாக சட்டவிரோதமாக பெற்றுள்ளன. இந்த இருநிறுவனங்களும் கலாநிதி மாறன் கட்டுப்பாட்டில் இருப்பவை'' என்று தெரிவித்தார்.