
புதுடெல்லி, அக். 26-
லண்டனில் தலைமறைவாக வாழ்ந்துவரும் தொழிலதிபர் விஜய் மல்லையா அடுத்த 4 வாரங்களுக்குள் தனது வெளிநாட்டு சொத்துவிவரங்களை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
சாராய சக்கரவர்த்தியான விஜய் மல்லையா வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தலை மறைவானார். அங்கு சென்றபின் தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். பல்வேறு காசோலை மோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் விசாரணைக்கு ஆஜர் ஆகாததையடுத்து, அமலாக்கப்பிரிவு துறையினர் கோரிக்கையை ஏற்று ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும், தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்தது. மேலும், அவரை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தவும் மத்திய அ ரசு முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், ஜூலை 25-ந்தேதி மத்திய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,“ விஜய் மல்லையா நீதிமன்றத்தில் தனது சொத்துவிவரங்கள் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளார். ரூ.2500 கோடி மதிப்பிலான பணபரிவர்த்தனைகளை அவர் வெளியிடவில்லை'' எனத் தெரிவித்து இருந்தார். இதையடுத்து மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மல்லையா தரப்பில் தாக்கல் செய்த மனுவில், 1988-ம் ஆண்டில் இருந்து வெளிநாடுவாழ் இந்தியரான தான், வெளிநாட்டில் உள்ள சொத்துவிவரங்களை வெளியிட வேண்டிய தேவையில்லை. வங்கிகள் அதை கேட்கும் உரிமை கிடையாது என கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி எஸ்.பி.ஐ. தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவில், விஜய் மல்லையா கடந்த பிப்ரவரி 25-ந்தேதி இங்கிலாந்து நிறுவனம் டியாஜியோ நிறுவனத்திடமிருந்து 4 கோடி டாலர்கள் பிரமாற்ற விவகாரத்தின் விவரங்கள் கூறப்படவில்லை. ஆதலால், மல்லையா தனது வெளிநாட்டு சொத்துவிவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப். நரிமன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ மல்லையா தெரிவித்த சொத்துவிவரங்களில் இங்கிலாந்து நிறுவனத்திடமிருந்து பெற்ற 4 கோடி அமெரிக்க டாலர் விவரங்கள் இல்லை. கடந்த ஏப்ரல்7ந்தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் முறையான தகவல்கள் இல்லை.
ஆதலால், இங்கிலாந்து நிறுவனத்திடமிருந்து பெற்ற டாலர்கள் மதிப்பு, எப்போது பெறப்பட்டது உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு சொத்து விவரங்களையும் அடுத்த 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.