மாதம் ரூ.150 சம்பளம்: உத்தரப்பிரதேச அரசை கடிந்து கொண்ட உயர் நீதிமன்றம்!

By Manikanda Prabu  |  First Published Sep 7, 2023, 6:29 PM IST

மாதச் சம்பளம் ரூ.150க்கு காவலாளியை மாநில அரசு வேலைக்கு அமர்த்துவது கட்டாய உழைப்புச் சுரண்டல் என உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 


மாநில அரசு மாதந்தோறும் ரூ.150 ஊதியத்திற்கு வேலையில் அமர்த்துவது கட்டாயத் தொழிலாளர் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது என உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.

பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்த ஒருவரது வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி இர்ஷத் அலி, மனுதாரரின் பணியின் தன்மை, ஒழுங்குமுறை, பொறுப்பு மற்றும் வேலை நேரம் ஆகியவை வழக்கமான ஊழியர்களுடன் ஒப்பிடத்தக்கது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Videos

undefined

இந்து மத நம்பிக்கை சர்ச்சை: மவுனம் சாதிக்கும் காங்கிரஸ் தலைமை - ரவிசங்கர் பிரசாத் சாடல்!

அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது உத்தரவில், “எந்த ஒரு மனிதனும் தன்னைத் தானே பராமரிக்க முடியாத அளவுக்கு அபத்தமான முறையில் குறைவான ஊதியம் கொடுத்து அவர்களின் உழைப்பை மாநில அரசு கட்டாயப்படுத்தினால், அது அடிப்படை மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்துடன் பணிபுரியும் உரிமையை மீறும் மனிதாபிமான உழைப்பைச் சுரண்டுவதாகும். இந்திய அரசியலமைப்பின் 21ஆவது பிரிவை மீறும் செயல் இது. மாநில அரசின் கீழ் மாதம் ரூ.150க்கு வேலைவாய்ப்பு என்பது சட்டத்தில் அனுமதிக்கப்படாத கட்டாய உழைப்புச் சுரண்டல்.” எனவும் தெரிவித்துள்ளது.

மனுதாரரான காவலாளி கடந்த 2004ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் இதுபோன்று உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் 1992 டிசம்பரில் வேலைக்கு அமர்த்தப்பட்டார், முதலில் மாதம் ரூ. 30 சம்பளம் பெற்றார். அடுத்த ஆண்டு, அவர் அதிகாரப்பூர்வமாக பணியில் அமர்த்தப்பட்டார். 1998ஆம் ஆண்டில் அவரது சம்பளம் ரூ.30இல் இருந்து ரூ.150ஆக உயர்த்தப்பட்டது, அன்றிலிருந்து இந்த தொகையை அவர் ஊதியமாக பெற்று வருகிறார்.

click me!