'பாஜகவின் புயல்காற்றிலும் சைக்கிள் புகுந்து செல்லும்’ - மோடிக்கு அகிலேஷ் பதிலடி

Asianet News Tamil  
Published : Feb 07, 2017, 10:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
'பாஜகவின் புயல்காற்றிலும் சைக்கிள் புகுந்து செல்லும்’ - மோடிக்கு அகிலேஷ் பதிலடி

சுருக்கம்

பாஜக புயலில் அகிலேஷ் யாதவ் ஊதித் தள்ளப்படுவார் என்று பிரதமர் மோடி கூறியதற்கு, ‘பாஜகவின் புயல் காற்றில் சைக்கிள் புகுந்து செல்லும்’ என்று உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

மோடி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கும் வரும் 11-ந்தேதி தொடங்கிய அடுத்த மாதம் 8-ந்தேதி வரைக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. மக்கள் சமாஜ்வாதி அரசு மீது நம்பிக்கை இழந்து விட்டனர். உத்தரப் பிரதேசத்தில் வீசும் பாஜக புயலில் முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ் ஊதித் தள்ளப்படுவார் என்று பேசினார்.

சைக்கிள் செல்லும்

இந்நிலையில், நேற்று சீதாப்பூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், மோடியின் விமர்சனங்களுக்கு அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

உத்தரப் பிரதேசத்தில் பாஜக புயல் வீசுவதாகவும், இதில் நான் ஊதித் தள்ளப்படுவேன் என்றும் கூறுகிறார். அவருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்; சமாஜ்வாதி கட்சியினரான எங்களுக்கு புயல் காற்றில் புகுந்து சைக்கிள் ஓட்டத் தெரியும். காங்கிரசின் கை சின்னம், எங்களை இன்னும் வேகமாக செல்ல உதவும். காங்கிரசும் சமாஜ்வாதியும் நட்பின் அடிப்படையில் அமைந்த கூட்டணி. உத்தரப் பிரதேசத்தில் அரசுக்கு எதிராக புயல் வீசுகிறது என மோடி உணர்ந்தால், அதே புயல்தான் பஞ்சாபில் வீசுகிறது என்பதையும் உணர வேண்டும்.

‘கடவுள்தான் அறிவார்’

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பற்றி தவறான தகவல்களை மோடி அளித்து வருகிறார். அவற்றை எங்கிருந்து பெற்றார் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். எனவே நேர்மையான முறையில் மோடி மக்களிடம் புள்ளி விவரங்களை தெரிவிக்க வேண்டும். நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த மாநிலங்களை பட்டியலிட்டால், முதல் மூன்று இடங்களில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள்தான் வரும்.

கருப்பு பணம்

வங்கிகளின் வாசலில் மக்களை நீண்ட வரிசையில் பாஜக நிற்க வைத்தது. வரிசையில் நின்று பலர் தங்களது உயிரை விட்டுள்ளனர். அவர்களுக்கு பாஜக இழப்பீட்டை வழங்கவில்லை. ஆனால் சமாஜ்வாதி கட்சி அவர்களுக்கு தலா ரூ. 2 லட்சத்தை வழங்கியது.

பிரதமர் மோடி வாக்களித்தபடி, மீட்கப்பட்ட கருப்பு பணத்தில் 15 லட்ச ரூபாய் யாருக்கும் கிடைக்கவில்லை. 15 ஆயிரம் ரூபாய் கூட மோடி அரசால் மக்களுக்கு வழங்க முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!
வாயில்லா ஜீவனை இப்படியா பண்றது? நாயை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!