
சோலாப்பூரில் சட்டவிரோத மண் அகழ்வை எதிர்த்து நடவடிக்கை எடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியுடன் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி குர்து கிராமத்தில் சட்டவிரோத மண் அகழ்வை எதிர்த்து நடவடிக்கை எடுக்கச் சென்ற கேரளாவைச் சேர்ந்த துணை காவல் கண்காணிப்பாளர் அஞ்சனா கிருஷ்ணாவுடன் பவார் தொலைபேசியில் வாக்குவாதம் செய்த இரண்டு நிமிடக் காணொளி வெளியாகியுள்ளது.
காணொளியில், “கேளுங்க, நான் துணை முதல்வர் பேசுறேன், இதை நிறுத்துன்னு உத்தரவு போடுறேன்” என்று அதிகாரத்துடன் கூறுவது பதிவாகியுள்ளது. அஞ்சனா கிருஷ்ணா அழைப்பவரின் அடையாளத்தை கேள்வி கேட்டு, தனது அலுவலக எண்ணுக்கு அழைக்குமாறு கூறினார். இதனால் கோபமடைந்த பவார், "நான் உன் மேல நடவடிக்கை எடுப்பேன்" என்று எச்சரித்தார்.
தனது அடையாளத்தை நிரூபிக்க முயன்ற துணை முதல்வர், "என்னைப் பார்க்கணுமா உனக்கு. உன் நம்பரைக் கொடு, இல்லன்னா வாட்ஸ்அப் கால் பண்ணு. என் முகம் தெரியும்ல உனக்கு." என்றும், "இவ்வளவு தைரியமா இருக்கியா" என்றும் கேட்டார். சிறிது நேரத்தில், பவார் வீடியோ அழைப்பு செய்து, நடவடிக்கையை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காவல்துறை நடவடிக்கையில் துணை முதல்வர் தலையிட்டதை பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். பவாரை ஆதரித்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா பிரிவுத் தலைவர் சுனில் தட்கரே, இது வேண்டுமென்றே வெளியிடப்பட்ட காணொளி என்று கூறினார். "கட்சித் தொண்டர்களை சமாதானப்படுத்தவே அஜித் பவார் ஐபிஎஸ் அதிகாரியைக் கடிந்துகொண்டிருக்கலாம். நடவடிக்கையை முழுமையாக நிறுத்த அவர் சொல்லவில்லை," என்று தட்கரே கூறினார். பவார் வெளிப்படையாகப் பேசுபவர் என்றும், சட்டவிரோத நடவடிக்கைகளை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார் என்றும் அவர் கூறினார். "அவர் சூழ்நிலையைத் தணிக்கவே நடவடிக்கையை சிறிது நேரம் நிறுத்தச் சொல்லியிருக்கலாம்," என்று வாதிட்டார்.