தேர்வு மையமாக மாறிய விமான ஓடுதளம்! 187 காலி இடங்களுக்கு 8000 பேர் போட்டி! பட்டதாரிகளின் பரிதாப நிலை!

Published : Dec 19, 2025, 07:31 PM IST
Odisha Home Guard Exam

சுருக்கம்

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில், வெறும் 187 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்காக 8,000-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளனர். விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், இந்தத் தேர்வு விமான ஓடுதளத்தில் நடத்தப்பட்டது.

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அவல நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு வியக்கத்தக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெறும் 187 ஊர்க்காவல் படை (Home Guard) பணியிடங்களுக்காக சுமார் 8,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே இடத்தில் திரண்டு தேர்வு எழுதியுள்ளனர்.

விமான ஓடுதளத்தில் தேர்வு

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகாரிகளின் எதிர்பார்ப்பை விடப் பல மடங்கு அதிகமாக இருந்தது. இவ்வளவு பெரிய கூட்டத்தைச் சாதாரண பள்ளிகளிலோ அல்லது தேர்வு மையங்களிலோ அமர வைக்க முடியாது என்பதால், மாவட்ட நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை எடுத்தது.

சம்பல்பூரில் உள்ள ஜமாதர்பாலி (Jamadarpali) விமான ஓடுதளம் தேர்வு மையமாக மாற்றப்பட்டது. இளைஞர்கள் அனைவரும் திறந்தவெளியில், விமான ஓடுதளத்திலேயே அமர வைக்கப்பட்டுத் தேர்வு எழுதினர்.

பட்டதாரிகள் போட்டி

இந்த ஊர்க்காவல் படைப் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைத் தகுதி 5-ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. இருப்பினும், வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பொறியாளர்கள் (B.Tech), எம்பிஏ (MBA) மற்றும் எம்சிஏ (MCA) முடித்தவர்கள், எனப் பல உயர்கல்வி கற்ற இளைஞர்களும் இந்தப் பணிக்காகப் போட்டியிட்டனர்.

நிர்வாகத்தின் விளக்கம்

சம்பல்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) இது குறித்துக் கூறுகையில், "ஒரே நேரத்தில் 8,000 பேருக்குத் தேர்வு நடத்த 20 பள்ளிகள் தேவைப்படும். ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே பல தேர்வுகள் நடப்பதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பான முறையில் தேர்வை நடத்தவும் விமான ஓடுதளம் தேர்ந்தெடுக்கப்பட்டது," என்றார்.

ட்ரோன்கள் (Drones) மூலம் கண்காணிக்கப்பட்ட இந்தத் தேர்வு எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெற்றது. ஊர்க்காவல் படைப் பணிக்கு நாள் ஒன்றுக்கு 612 ரூபாய் (மாதம் சுமார் ₹18,360) ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிரெண்டிங்கில் பிரதமரின் ஓமன் பயணம்! மோடி காதில் மின்னிய அந்தப் பொருள் இதுதான்!
ரத்தக் களறியான காதல் திருமணம்.. சண்டையில் மணமகனின் மூக்கை அறுத்த பெண் வீட்டார்!