
பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டிற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓமன் துணைப் பிரதமர் செய்யித் ஷிஹாப் பின் தாரிக் அல் சையத், பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கே வந்து உற்சாகமாக வரவேற்றார். பாரம்பரிய நடனம் மற்றும் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி விமான நிலையத்தில் ஓமன் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது இடது காதில் ஒரு சிறிய வைரம் போன்ற மின்னும்கருவி தென்பட்டது.
இதைப் பார்த்த சமூக வலைதளவாசிகள், "பிரதமர் மோடி புதிய பாணியில் கடுக்கன் அணிந்துள்ளாரா?" என்று ஆச்சரியத்துடன் விவாதிக்கத் தொடங்கினர். ஆடை அலங்காரத்தில் எப்போதும் தனி கவனம் செலுத்தும் பிரதமர் மோடியின் இந்த 'புதிய ஸ்டைல்' பெரும் பேசுபொருளானது.
இருப்பினும், அது ஃபேஷனுக்காக அணியப்பட்ட கடுக்கன் அல்ல என்பது சிறிது நேரத்திலேயே உறுதியானது. அது ஒரு 'ரியல் டைம் டிரான்ஸ்லேஷன்' (Real-time translation device) கருவி ஆகும்.
ஓமனின் அதிகாரப்பூர்வ மொழி அரபு என்பதால், அந்நாட்டுத் தலைவர்கள் பேசுவதை உடனுக்குடன் மொழிபெயர்த்துப் புரிந்துகொள்வதற்காகப் பிரதமர் இந்தத் தொழில்நுட்பக் கருவியைப் பயன்படுத்தியுள்ளார்.
உயர்மட்ட அரசுமுறைப் பயணங்களில் தடையற்ற தகவல் பரிமாற்றத்திற்காக இத்தகைய நவீனக் கருவிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
இந்தியா மற்றும் ஓமன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இந்தியாவின் 98% ஏற்றுமதி பொருட்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும். அதேபோல், ஓமனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழம் மற்றும் மார்பிள் கற்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைக்கும்.
இந்தியா-ஓமன் உறவை மேம்படுத்தியதற்காகப் பிரதமர் மோடிக்கு ஓமனின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் ஓமன்' (Order of Oman) வழங்கப்பட்டது. ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்த விருதை வழங்கிக் கௌரவித்தார்.
"இந்த விருது இந்தியா மற்றும் ஓமன் நாட்டு மக்களிடையே உள்ள அன்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளம்" என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.