Kuwait: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல் இன்று கொச்சி வருகிறது!!

By Asianet Tamil  |  First Published Jun 14, 2024, 10:27 AM IST

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குவைத்தில் நடந்த தீ விபத்தில் இந்தியர்கள் 45 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 7 பேர் தமிழர்கள் என்று தெரிய வந்தது.


குவைத் நாட்டின் மங்கஃப் பகுதியில் இருக்கும் ஆறு மாடி கட்டிடத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீ விபத்து நடந்தது. தீ விபத்து நடந்தபோது 176 இந்தியர்கள் இந்தக் கட்டிடத்தில் உறங்கிக் கொண்டு இருந்தனர். மளமளவென பற்றிய தீயில் 48 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 7 பேர் தமிழர்கள் என்பது தெரிய வந்தது. காயம் அடைந்த 33-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்திய விமானப்படை விமானத்தில் இன்று இந்தியா கொண்டு வரப்படுகிறது. மத்திய அமைச்சராக பதவியேற்றவுடன் விமானத்துறை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் குவைத் விரைந்தார்.  அங்கு உயிரிழந்தவர்களின் உடலை சிறப்பு விமானத்தில் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். அவரும் இன்று காலை 11 மணிக்கு கொச்சி வரும் அதே விமானத்தில் வருகிறார். 

Latest Videos

undefined

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் குவைத் இந்திய தூதரகம், ''குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் இந்தியா கொண்டு வரப்படுகிறது. குவைத்தில் இருந்து இந்த விமானம் கொச்சி வரும், பின்னர் டெல்லி செல்லும். குவைத் அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் இணைந்து செயல்பட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளது.

A special IAF aircraft carrying mortal remains of 45 Indian victims in the fire incident in Kuwait has taken off for Kochi.

MoS , who coordinated with Kuwaiti authorities ensuring swift repatriation, is onboard the aircraft pic.twitter.com/PEmBfy4wj2

— India in Kuwait (@indembkwt)

கொச்சி விமான நிலையத்தில் உயிரிழந்தவர்களின் உடலை ஏற்றிக் கொண்டு வரும் இந்திய விமானப் படை வரும் இடத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 

உயிரிழந்தவர்களில் 23 பேர் கேரளாவையும், 7 பேர் தமிழ்நாட்டையும், 3 பேர் உத்தரப்பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். மேலும் பீகார், பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஜார்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த வியாழக்கிழமை குவைத் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருந்தார். இதையடுத்து, குவைத் நாட்டின் துணை பிரதமர் ஷேக் பஹத் அல் யூசுப் அல் சபாவையும் அமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது அனைத்து வகையிலான உதவிகளையும் செய்வதாக குவைத் துணை பிரதமர் உறுதியளித்து இருந்தார். முன்னதாக உயிரிழந்தவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயை பிரதமர் மோடி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!