விவசாய கடன் வட்டி ரூ. 660 கோடி தள்ளுபடி - ‘இன்பஅதிர்ச்சி’ கொடுத்த மோடி

First Published Jan 24, 2017, 5:16 PM IST
Highlights


விவசாயிகள் 2016ம் ஆண்டு  பெற்ற குறுகியக்காலக் கடனில்  நவம்பர்-டிசம்பர் மாதத்துக்கான வட்டி ரூ. 660.50 கோடியை தள்ளுபடி செய்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்து அறிவித்துள்ளது.

மேலும், கூட்டுறவு வங்கிகளுக்கு நிதி அளிக்க நபார்டு வங்கிக்கு ரூ.400 கோடி அளிக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ரூபாய் நோட்டு தடை

நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து மக்கள், விவசாயிகளிடம் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு வட்டியை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த முடிவை வட்டி தள்ளுபடி முடிவை அரசு எடுத்துள்ளது.

ரூ. ஆயிரம் கோடி

பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவு குறித்து  மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன்சிங்நிருபர்களிடம் நேற்று கூறியதாவது-

பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளுக்காக ரூ. 1,060.50 கோடியை ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குறுகியகால கடன்

விவசாயிகள் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை குறுகிய காலக்கடனாக ரூ. 3 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகளில்  பெற்றனர். இதற்கு 7 சதவீதம் வட்டியும், சரியாக செலுத்தும் விவசாயிகளுக்கு இறுதியில் 3 சதவீதம் வட்டித்தள்ளுபடியும் அளிக்கப்படும்.

ரூபாய் நோட்டு தடை சிக்கலால் ஏற்பட்ட  பணத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் வட்டியை செலுத்தமுடியாத சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஆதலால், இந்த குறுகிய காலக்கடனுக்கான நவம்பர், டிசம்பர் மாத வட்டி ரூ. 660.50 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ரூ. 15 ஆயிரம் கோடி

ஒருவேளை நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட்டியை விவசாயிகள் செலுத்தி இருந்தால், அவர்களுக்கு வட்டித் தொகை, மீண்டும் அவர்களின் வங்கிக்கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும். மேலும், கூட்டுறவு, நபார்டு வங்கியின் நிர்வாகச் செலவுக்காக ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டில் விவசாயிகளுக்காக வட்டி உதவி திட்டத்தின் கீழ் ரூ. 15 ஆயிரம் கோடியும் அளிக்கப்படுகிறது '' எனத் தெரிவித்தார்.

click me!