
குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்புதான் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குஜராத் தேர்தலுக்கு முன்பு கூட்டத்தொடரை நடத்தினால், ரூபாய்நோட்டு தடை, ஜி.எஸ்.டி. பாதிப்புகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினால், குஜராத் தேர்தல் வெற்றி பாதிக்கப்படலாம் எனக் மத்திய அரசு கருதுகிறது. ஆதலால் கூட்டத்தொடர் டிசம்பர் 12ந் தேதிக்கு பின் தொடங்கவே வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வழக்கமாக தீபாவளிப் பண்டிகை முடிந்தபின், 2 வாரங்களில் தொடங்கும். இந்த முறை கடந்த மாதம் 19-ந்தேதி தீபாவளிப்பண்டிகை வந்ததால், அடுத்த சில நாட்களில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு நாடாளுமன்றம் குளிர்காலக்கூட்டத் தொடர் குறித்த தேதியை முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
விதிமுறைகளின்படி, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். அப்போதுதான், தங்களின் தொகுதிகளில் இருந்து எம்.பி.க்கள் கூட்டத்துக்கு வர முடியும், ேமலும் தங்களின் கேள்விகளையும், கோரிக்கைகளையும் எழுதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அளிக்க முடியும்.
வழக்கமாக குளிர்காலக் கூட்டத்தொடர் என்பது நவம்பர் 2-வது வாரதத்தில் தொடங்கி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக முடிந்துவிடும். ஆனால், இன்னும் அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை.
முதலில் வெளியான தகவலின்படி, இந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத் தொடரை மிகவும் குறைந்த நாட்களாக அதாவது 10 நாட்களில் நடத்தி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகச் செய்திகள் வந்தன.
இதற்கிடையே ‘என்.டி.டி.வி.’ சேனல் வெளியிட்ட செய்தியில், முதல்முறையாக, இந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாகச் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று கூறுகையில், “ இந்த ஆண்டு நாடாளுமன்றக்கூட்டத்தொடர் தொடங்குவது மிகவும் தாமதமாகும். வழக்கமாக நவம்பர் மாதத்தில் தொடங்கும் கூட்டத்தொடர் இந்த முறை தொடங்காது.
குஜராத் தேர்தல் பிரசாரம் டிசம்பர் 12ந்தேதி முடிகிறது. அதன்பின்பே கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் தேர்தல் பிரசாரத்துக்காக பாஜனதா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பெரும்பாலும் சென்றுவிடுவார்கள். தேர்தலுக்கு முன்பாக கூட்டத்தொடரை நடத்தினால், எம்.பி.க்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் மீது விவாதங்கள் நடத்தவும் முடியாது ஆதலால் கூட்டத்தொடர் தாமதமாகவே தொடங்கும் ’’ எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் தேர்தலுக்கு முன்பாக கூட்டத்தொடரை நடத்தினால், பா.ஜனதா அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடையால் ஏற்பட்ட பாதிப்புகள் , வேலையிழப்புகள் குறித்தும், ஜி.எஸ்.டி. வரி உயர்வு குறித்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி, கடுமையாக பேசக்கூடும். அதனால், குஜராத் தேர்தல் வெற்றி பாதிக்கப்படலாம் என்கிற காரணத்தால் கூட்டதொடரை தாமதப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.