எப்படி இருந்த அத்வானி இப்படி ஆகிட்டார்... தேர்தலில் சீட்டு கிடைப்பது சந்தேகம்...!

By Asianet TamilFirst Published Mar 21, 2019, 7:09 AM IST
Highlights

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பாஜக மூத்தத் தலைவருடன் அக்கட்சி மேலிடம் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

பாஜக மூத்த  தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எ.கே. அத்வானி 1998-ம் ஆண்டிலிருந்து குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதி எம்.பி.யாக இருந்துவருகிறார். வாஜ்பாய் அமைச்சரவையில் துணை பிரதமராகவும் உள்துறை பொறுப்பையும் வகித்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார். மோடி பிரதமரான பிறகு அத்வானிக்கு எந்தப் பொறுப்பும் வழங்கவில்லை. குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையிலும், அவருக்கு அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.


இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் அத்வானி மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வயதானவர்கள் தேர்தலில் போட்டியிட பாஜகவில் கட்டுபாடுகள் உள்ளதால், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவிவருகிறது.  இந்நிலையில் அத்வானி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இதுவரை கட்சி சார்பில் அவருடன் யாரும் பேசவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இதுபற்றி எல்.கே. அத்வானியின் உதவியாளர் தீபக் சோப்ரா கூறும்போது, “மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றி அத்வானி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவர் போட்டியிட வேண்டும் என்று கேட்டு அத்வானியை பாஜக தலைவர்கள் யாரும் அணுகவும் இல்லை” என்று  தெரிவித்துள்ளார். இதற்கிடையே அத்வானி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பாஜகவின் ஆட்சிமன்ற குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த, 1984-ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்ற பாஜகவின் வளர்ச்சியில் அத்வானிக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!