ஆம் ஆத்மி கட்சி கொண்டு தீர்மானத்தில் தான் கையெழுத்து போடவில்லை என அதிமுக எம்.பி., தம்பிதுரை புகார் அளித்துள்ளார்
டெல்லி அதிகாரத்தை கட்டுப்படுத்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா மக்களவையில் கடந்த 3ஆம் தேதி நிறைவேறிய நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 131 எம்.பி.க்களின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் நேற்று நிறைவேறியது.
இந்த மசோதாவுக்கு டெல்லி ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி, கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய அக்கட்சியின் எம்.பி.யான ராகவ் சத்தா, இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்தை முன்வைத்தார். அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டது.
பாஜகவின் பாசிசம் அரங்கேறிய கறுப்பு நாள்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
இதனிடையே, ராகவ் சத்தா கொண்டு வந்த தீர்மானத்தில் தங்களது கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளதாக அதிமுக மாநிலங்களவை எம்.பி., தம்பிதுரை உள்பட ஐந்து எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர். அந்த தீர்மானத்தில் தனது பெயர் எப்படி சேர்க்கப்பட்டது என தெரியவில்லை எனவும், தீர்மானத்தில் தான் கையெழுத்து போடாமலேயே தனது பெயர் இடம்பெற்றுள்ளது எனவும், தனது கையெழுத்தை யாரோ முறைகேடாக போட்டுள்ளனர் எனவும் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், ராஜ்யசபா சபாநாயகரிடம் அவர் புகாரும் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறுகையில், “நான் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை. ஆனால், தீர்மானத்தில் எனது பெயர் எவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளது என்று சிறப்புரிமைக் குழுவைக் குறிப்பிட்டு ராஜ்யசபா தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். எனவே, எனது கையெழுத்தை யாரோ போலியாக இட்டிருக்கலாம்.” என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா, “சிறப்புரிமைக் குழு எனக்கு நோட்டீஸ் அனுப்பட்டும். குழுவிடம் எனது பதிலை அளிப்பேன்.” என தெரிவித்துள்ளார்.