
உத்தரப்பிரதேசத்தில் அரசின் உத்தரவை மீறி வேலை நேரத்தில் குட்கா, பான்மசாலா சாப்பிட்டும், காலில் பூட்ஸ் அணியாமலும் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதசேத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுள்ளார். தான் பதவி ஏற்றதில் இருந்து முதல்வர் ஆத்தியநாத் அதிரடியாக பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
அதில் முக்கியமாக, அரசு அதிகாரிகள் யாரும் வேலை நேரத்தில் பான் மசாலா, குட்கா சாப்பிடக்கூடாது, அலுவலகத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்பதாகும். இந்நிலையில், அந்த உத்தரவை மீறி செயல்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியை ஆதித்யநாத் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
தலைநகர் லக்னோ அருகே மடியான் பகுதி போலீஸ் நிலையத்தில் நாகேஷ் மிஸ்ரா என்பவர் இன்ஸ்பெக்டராக இருந்து வருகிறார். இவர் நேற்று காலில் “பூட்ஸ்” அணியாமலும், முறையான சீருடை அணியாமலும், ேவலை நேரத்தில் பான்மசாலா, “குட்கா” சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். இந்த காட்சியை செய்திச் சேனல்கள் படம் பிடித்து ஒளிபரப்பின.
இதையடுத்து, லக்னோ நகர போலீஸ் சூப்பிரெண்டு மன்சில் சைனி,நேரடிாகக் களத்தில் இறங்கி இன்ஸ்பெக்டர் நாகேஷ் மிஸ்ராவை அழைத்து விசாரித்தார். அப்போது முதல்வர் ஆதித்யநாத் உத்தரவையும் மீறி நடந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நாகேஷ் மிஸ்ராவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
போலீஸ் எஸ்.பி. மன்சில் சைனி கூறுகையில், “அலுவலகத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுக்க சகபோலீஸ் அதிகாரிகள் கூறியபோது, அவர் நான் தரையை சுத்தம் செய்ய இன்ஸ்பெக்டர் வேலைக்கு வரவில்லை என்று நாகேஷ் மஸ்ரா கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பணிக்கு சீருடை அணியாமல், பூட்ஸ் அணியாமல், வாயில் குட்கா போட்டுக்கொண்டு அரசு உத்தரவை மீறியுள்ளார். அதனால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்” என்று தெரிவித்தார்.