
வரலாற்றை அழித்தவர்களை வௌிப்படுத்தி மக்கள் தெரிந்து கொள்வது அவசியம், அதே சமயம், பள்ளி பாடங்களில் திருத்தம் செய்யப்பட்டு, வரலாற்றில் மறக்கப்பட்ட தலைவர்களை சேர்க்க ஆலோசிக்கப்படும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்தார்.
கூட்டம்
லக்னோவில் ‘விஸ்வ இந்து பரிசத்’ அமைப்பின் சார்பில் ‘இந்து விஜயோட்சவ்’ என்ற கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஆதித்யநாத் கலந்து கொண்டு நேற்று பேசினார். அவர் பேசியதாவது-
ஆலோசனை
வரலாற்றில் தங்களை இணைத்துக்கொண்ட முகமது கஸ்நவி, அலாவுதீன் கில்ஜி,பாபர் மற்றும் அவுரங்கசீப் ஆகியோருக்கு இடம் கொடுக்கப்பட வேண்டுமா என்பது குறித்து ஆலோசிப்பது அவசியம்.
மகாராஜா சுகேல்தேவ் போன்ற மிகச்சிறந்த ஆளுமை கொண்ட அரசர்கள், அரசியல் சதி காரணமாக வரலாற்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக வரலாறு அழிக்கப்பட்டு, மக்கள் பிரித்தாளப்பட்டுள்ளனர்.
தெரியப்படுத்துவது
வரலாற்றை அழித்தவர்கள் குறித்து உலகிற்கு தெரியப்படுத்துவது அவசியம். அதற்கான நாள் வரும். இதற்காக நாம் ஒரு பிரசாரத்தை தொடங்க வேண்டும்.
சுதந்திர போராட்டத்தில் சிறப்பான பங்களிப்பு செய்த சிறந்த தலைவர்களை மரியாதை செய்ய பிரதமர் மோடியின் அரசு பணிகளைத் தொடங்கியுள்ளது.
திருத்தம்
நாட்டின் முக்கிய தலைவர்களின் நினைவு, பிறந்தநாளுக்கு அளித்துவந்த விடுமுறையை ரத்து செய்து, அந்த நாளில் மாணவர்களுக்கு அவர்கள் குறித்து கற்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த என்னுடைய அரசும் முடிவு செய்துள்ளது.
மேலும், வரலாற்றில் மறைக்கப்பட்ட தலைவர்களை பாடப்புத்தகத்தில் சேர்ப்பது குறித்தும், பாடங்களை மாற்றுவது குறித்தும் ஆலோசனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.