
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மணல் மாபியாக்களை ஒடுக்கும் நோக்கில் முதல்வர் ஆதித்யநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆதால், எந்தநேரமும், மணல் மாபியாக்களை கட்டுப்படுத்த அதிரடி உத்தரவுகளை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அணில் தவே அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மாநிலத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதை தடுக்க ேவண்டும் என்பது குறித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் முதன்முதலில் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு கிடைத்துள்ளது. கடிதம் கையில் கிடைத்தவுடன் அதிரடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அணில் தவே எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது-
சட்டவிரோத மணல் மாபியாக்களை கட்டுப்படுத்த, அதிகமான அங்கீகரிக்கப்பட்ட மணல் குவாரிகளை அரசு, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியுடன் உருவாக்குவது அவசியம். மேலும், மணல் குவாரிகளை தீவிரமாக கண்காணிப்பது, செயல்பாடுகளை கூர்ந்து நோக்குது, ஆகியவை இயற்கை கொள்ளை போவதில் இருந்து தடுக்க முடியும். ஆதலால், மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் அனைத்து மணல் குவாரிகள், மாபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, புதிய லைசன்சுகளை அதிகப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியஅரசின் இந்த கடிதத்தைத் தொடர்ந்து, நேற்று இரவு பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகளோடு முதல்வர் ஆதித்யநாத் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். மாநிலத்தில் உள்ள சட்டவிரோத மணல்குவாரிகளை ஒழிக்கும் வகையிலும், மணல்மாபியாக்களை ஒடுக்கும் வகையில், முதல்வர் ஆதித்யநாத் எந்தநேரமும் உத்தரவுகளை பிறப்பிப்பார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணல்மாபியாக்கள் பீதியிலும், அச்சத்திலும் இருக்கின்றனர்.