
5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மக்களிடத்தில்தான் வாக்குக் கேட்க போக வேண்டும், ஆதலால், ஊழல் செய்யாமல், மக்களின் நம்பிக்கையை பெறும் நோக்கில் செயல்படுங்கள் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரை வழங்கினார்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப்பின் பா.ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. கோரக்பூர் மடாதிபதியும், எம்.பி.யுமான யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இவர் பதவிக்கு வந்ததில் இருந்து குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்காக ஆன்ட்டி ரோமியோ படை, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, சட்டவிரோத இறைச்சிக்கடைகளை மூடுதல், அரசுஊழியர்களுக்கு ஒழுக்க நெறிகள் என அடுத்தடுத்து எடுத்து வரும் அதிரடியான நடவடிக்கைகள் மூலம் மக்கள் ஆதரவைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், புதிதாக தேர்வுசெய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கான பயிலரங்கு லக்னோவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் ஆதித்யநாத் கலந்துகொண்டு எம்.எல்.ஏ.க்களுக்கு பாடங்களையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது-
நாடாளுமன்ற ஜனாநாயகத்துக்கு உட்பட்ட எந்த அமைப்பும் மக்களுக்கு பதில் கூறவும், நம்பிக்கைக்குரிய வகையிலும் நடக்க கடமைப்பட்டவர்கள்.
எம்.எல்.ஏ.க்களுக்கு ஒன்று மட்டும் நினைவில் இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களாக இருக்கப்போவதில்லை, 5 ஆண்டுகளுக்குபின் மக்களைச் சென்று சந்திக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு நாம் பதில் கூறவும், நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்பட கடமைப்பட்டவர்கள்.
நீதித்துறை,அரசு உயர்பொறுப்பு, ராணுவத்தில் ஓய்வு பெற்றவர்கள் கூட எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. ஆக முடியும். மக்களின் பிரதிநிதிகளாகவருவோர்கள் நம்பக்கத்தன்மை உள்ளவர்களாக, ஊழல் குற்றச்சாட்டில் சிக்காதவர்களாக இருக்க வேண்டும். தனிப்பட்ட ஒவ்வொரு நபர் மீது உருவாகும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த அரசியல் முறையையும் பாழாக்கிவிடும்.
இந்த பயிலரங்கு அமைக்கப்பட்டதன் நோக்கம், மக்கள் பிரதிநிதிகள் நம்பகத்தன்மையின் அடையாளமாக இருக்க ேவண்டும். நாட்டில் அனைத்து சட்டசபைகளுக்கும் முன் உதாரணமாக உ.பி. சட்டசபை இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
சட்டசபையில் கூச்சலிடுவது, கோஷமிடுவது, அமளியில் ஈடுபடுவது சரியான அனுகுமுறை அல்ல. முறையான வழியில் ஆக்கப்பூர்வமாக நமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும். சட்டசபை ஆண்டுக்கு 90 நாட்கள் நடக்க வேண்டும். இப்போது 25 நாட்கள் மட்டுமே நடக்கிறது. அதை 90நாட்களாக உயர்த்த வேண்டும்.
எம்.எல்.ஏ.க்கள் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொள்ள வேண்டும். உங்களின் வார்த்தைகளும், நடத்தையும்தான் உங்களை அடையாளப்படுத்தும்.
இ்வ்வாறு அவர் பேசினார்.