வங்கிக் கடனை கட்டாதவர்களுக்கு வேட்டு வைக்கும் மத்திய அரசு - வருகிறது அவசர சட்டம்

First Published May 4, 2017, 9:41 AM IST
Highlights
central government new law for who didnt pay home loan


வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் “டிமிக்கி” கொடுத்து வரும் நபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு கிடுக்கிப்படி போட அவசரச் சட்டத்தை மத்தியஅரசு கொண்டு வருகிறது.

வங்கி ஒழுங்குமுறைச்சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாளைக்குள் கையொப்பம் ஆகும் பட்சத்தில் அந்த அவசரச்சட்டம் நடைமுறைக்கு வரும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வாராக்கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு மதிப்பீட்டின்படி ரூ.6 லட்சம்கோடி வாராக்கடனாக இருக்கிறது. இதை திருப்பி வசூலிக்கும் பணியில் வங்கி அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்தும் பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், இப்போது வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த அவசரச்சட்டத்தின் முக்கிய சாராம்சம் குறித்து அதிகாரிகளும், அமைச்சர்களும் கருத்துக் கூற மறுத்துவிட்டனர். அதேசமயம், நிதித்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “ வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் நபர்கள், நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், வராக்கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கியின் நேரடி பார்வையில் ஒரு குழு அமைத்து, பணிகளை மேற்பார்வையிட முடியும்.

மேலும், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் நிறுவனங்களை நடத்திவரும் நபர்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, திவாலானவர் என அறிவித்து, சொத்துக்களை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்து, கடனை வசூலிக்க முடியும்.

இதில் முதல்கட்டமாக மிக அதிகமாக கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் 50 முக்கிய நபர்கள் பட்டியலை அரசு கையில் எடுத்துள்ளது. அவர்கள் மீது மிகவிரைவில் நடவடிக்கை பாயும்” எனத் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று முடிந்த நிலையில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ வங்கித்துறை குறித்து மிக முக்கியமான முடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த அவசரச்சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்தவுடன், சட்டம் குறித்து தெளிவாக விளக்குவோம். அதுவரை கூற முடியாது” என்று தெரிவித்தார்.

குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள அவசரச்சட்டத்துக்கு நாளைக்குள் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், கடன் மோசடியாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கைகள் பாயலாம்.

click me!