
தமிழகத்தில் குடியிருப்பு பகுதி, வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், அருகே டாஸ்மாக் கடை வைக்கக்கூடாது என்று மக்கள் போராடி வருகிறார்கள்.
ஆனால், உத்தரப்பிரதேசத்தில் நிலைமையே வேற. முதல்வர் ஆதித்யநாத், நேரடியாக அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், இந்து, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள் அருகே மதுக்கடைகள் இருக்க கூடாது என எச்சரித்து களத்தில் இறங்கி இருக்கிறார்.
குறிப்பாக, பிருந்தாவன், அயோத்தி, சித்தரகூட்,தியோபந்த், தேவா ஷெரீப், மிஸ்ரிக் –நைமிஷெர்யானா, பிரன் கலியார் ஷெரீப் போன்ற வழிபாட்டு தலங்கள் அருகே கண்டிப்பாக மதுக்கடை இருக்ககூடாது என்று ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வாரணாசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில், மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடம், அலகாபாத்தில் சங்கம் பகுதி ஆகியவற்றுக்கு ஒரு கிலோமீட்டருக்கு அருகே மதுக்கடைகள் இருக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டுத் தலங்கள்அனைத்தும் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வரும் இடங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் 8 ஆயிரத்து 544 மதுக்கடைகள் குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே செயல்பட்டு வருவதாக தெரியவந்தள்ளது. உடனடியாக அந்த கடைகளை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாத அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.
மற்றமாநிலங்களில் மதுக்கடைகள் எங்கு வைக்கப்பட்டு இருக்கின்றன, அந்த மாநிலத்தில் கலால்வரிக் கொள்கைகள் என்ன என்பதை தெரிந்து கொண்டுபுதிதாக மாநிலத்துக்கு கலால்வரிக்கொள்கை உருவாக்குகள் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் அருகே மதுக்கடைகள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது போல், முஸ்லிம் மக்கள் வழிபாட்டுத் தலங்கள் அருகேயும் மதுக்கடைகள் செயல்படக்கூடாது.
குறிப்பாக, தருல் உலூம், வாரிஸ் அலிஷா தர்ஹா, அலாவுதீன் அல் அகமது சபீர் கலியார் தர்ஹா போன்ற இடங்களுக்கு அருகேயும் மதுக்கடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன. நேர்மையான அதிகாரிகள்தான் இதுபோன்ற இடங்களை கவனமாக கண்காணிப்பார்கள் என்பதால், அதற்குரிய அதிகாரிகள் பட்டியலை தயார் செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.