
மக்கள் குறை கேட்கும் கூட்டத்தில் அதிகாரிகள் நாற்காலியில் அமர்ந்து இருப்பார்கள், மக்கள் நின்று கொண்டே தங்கள் குறைகளை மனுவடிவில் அளிப்பார்கள். இதைத்தான் அதிகாரிகள் வழக்கத்தில் செய்து வருகிறார்கள்.
ஆனால், உத்தரப்பிரதேசத்தின் புதிய முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்த பின் நிலைமையே வேறு. மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் மக்களை அமரவைத்து, அதிகாரிகளுடன், நடந்தே சென்று முதல்வர் ஆதித்யநாத் குறைகளைக் கேட்டு அறிந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை மட்டுமின்றி, அதிகாரிகளையும் மிரளச் செய்துள்ளது.
முதல்வர் ஆதித்யநாத் தனது தொகுதியான கோரக்பூருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்று, மக்களிடம் குறைகளைக் கேட்டுள்ளார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மக்களின் குறைகளை நானே நேரில் கேட்டு , தீர்த்து வைப்பதற்கான விரைவில் “ஜனதா தர்பார்” ஒன்றை 2 வாரத்துக்கு ஒருமுறை நடத்த முடிவு செய்துள்ளேன். அந்த தர்பாரில் மக்கள் தங்கள் குறைகளை என்னிடம் நேரில் வந்து தெரிவிக்கலாம், அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, குழந்தைகளின் பள்ளிப்பாடப் புத்தகங்கள் திடீர் விலை ஏற்றம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பிரச்சினைகள் குறித்து என்னிடம் மக்கள் வருத்தம் தெரிவித்தனர். அவற்றை களைய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் நடத்தும் ஜனதா தர்பாரில் சாதி, மத வேறுபாடுகள் இன்றி மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கலாம். அவர்களின் குறைகளுக்கு உரிய கவனம் செலுத்தி தீர்த்து வைக்கப்படும். நான் இல்லாத நேரத்தில் எனது தொகுதி அலுவலகத்தில் வந்து மக்கள் மனுக்களை அளிக்கலாம்.
நாள்தோறும் காலை 9 மணி முதல் 11 மணிவரை மக்கள் தொகுதி அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்திக்கலாம். என்னைப் பொருத்தவரை மக்கள் தான் எஜமான்கள். அவர்களுக்கானதுதான அரசு” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே முதல்வர் ஆதித்யநாத்தின் கார் டிரைவர் அவருக்கு தெரியாமல் பான்மசாலா மென்று விட்டு, அவரைப் பார்த்தவுடன் துப்பிவிட்டு இருந்தார். இதை ஆதித்யநாத் கவனித்து விட்டார். இதையடுத்து, அந்த டிரைவரை கடுமையாக கண்டித்த ஆதித்யநாத், அவருக்கு அபராதமும் விதித்தார்.