
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்று இந்து அமைப்புகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூறி வருகின்றனர். கோயிலுக்கு வரும் பெண்களையும் அவர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
எங்கள் உயிர் இருக்கும்வரை பெண்களை கோயிலுக்குள் அனுப்ப மாட்டோம் என்றும் அவர்கள் சூளுரைத்துள்ளனர்.இந்த நிலையில், பதினெட்டாம் படியில் நடிகை ஒருவர் கை வைத்தபடி நடித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 1985 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஜெயஸ்ரீ. இவர்தான் சபரிமலையின் 18 ஆம் படியில் கைவைத்த நடித்து சர்ச்சையில் சிக்கியவர்.
1986 ஆம் ஆண்டு வெளியான நம்பினார் கெடுவதில்லை என்ற ஐயப்பன் புகழைப் போற்றும் திரைப்படம் வெளியானது. இதன் படப்பிடிப்பு, ஐயப்பன் கோயிலில் 18 ஆம் படியில், திருவிதாங்கூர் தேவசம்போர்டு அனுமதியுடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக தெரிகிறது. அந்த பாடல் காட்சியில், பதினெட்டாம் படி முன்பு ஜெயஸ்ரீ நடித்தபோது மாலைப்போட்டு வந்த பக்தர்களைக் காக்க வைத்துவிட்டு, அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம். அப்போதும் கூட கன்னிப்பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி கிடையாது.
ஆனாலும், படப்பிடிப்புக்காக நடிகை ஜெயஸ்ரீ பதினெட்டாம் படியில் ஏறி நின்று ஐயப்பனை வேண்டுவதுபோல் படமாக்கப்பட்டது. சபரிமலை கோயிலை பிரபலபடுத்தும் நோக்கோடு, படம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, சுதாரித்துக் கொண்ட தேவசம்போர்டு, படப்பிடிப்பு குழுவுக்கு ரூ.7.500 அபராதம் விதித்ததாம். தற்போது, ஜெயஸ்ரீ நடித்த அந்த காட்சிகளுடன், இது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சபரிமலைக்கு வரும் பெண்கள் தடுக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சபரிமலை பகுதியில் கலவர சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது சபரிமலை கோயிலுக்கு பெண்களை அனுமதிக்க மறுக்கும் தேவசம்போர்டு, சபரிமலை கோயிலை பிரபலப்படுத்தும் வகையில் நம்பினார் கெடுவதில்லை என்ற படத்தில் பதினெட்டாம் படியை அனுமதித்தது எப்படி என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.