
பத்மாவத் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் சீர்கேட்டை தடுக்க குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்; உங்களால் முடியவில்லை என்றால் எந்த சாக்குபோக்கும் சொல்லாதீர்கள் என்று நடிகர் அரவிந்த்சாமி டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உருவாக்கத்தில் பத்மாவதி திரைப்படம் உருவாக்கப்பட்ட கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பா.ஜ.க, ராஜ்புத் கார்னி சேனா, ராஜ்புத் சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் பத்மாவதி திரைப்படம் பத்மாவத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று இந்தியா முழுக்க ரிலீஸ் செய்யப்படுகிறது. பத்மாவத் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், திரைத்துறையினர் பலரும், பத்மாவத் திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பத்மாவத் திரைப்படத்துக்கு நடிகர் அரவிந்த்சாமி, கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் அரவிந்த்சாமி டுவிட்டரில், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள். ஒன்று நாட்டு மக்களுக்கும் அவர்கள் உடைமைகளுக்கும் பாதுகாப்பு தாருங்கள். உங்களால் முடியவில்லை என்றால், அதற்கு எந்த சாக்குபோக்கும் சொல்லாதீர்கள். உங்கள் நிர்வாக சீர்கேட்டைத் தவிர இங்கே குறை சொல்வதற்கு வேறொன்றும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.