
போலி முகவரியில் கார் பதிவு செய்யப்பட்டதை கேரள அரசு உறுதிப்படுத்தினால் நடிகை அமலா பால் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் புதுவை அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, நடிகை அமலாபால் மீது, போலி முகவரி கொடுத்து சட்டத்தை மீறி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சுமார் 20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், விசாரணை நடத்தி 15 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறும் புதுச்சேரி போக்குவரத்து துறை செயலருக்கு, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் வரி குறைவு என்பதற்காக கேரளாவில் வாகனத்தை பதிவு செய்யாமல், புதுச்சேரியில் வாகனத்தை பதிவு செய்ததால் கேரளா அரசுக்கு கிடைக்க வேண்டிய வரித்தொகை கிடைக்காமல் போனதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, நடிகை அமலாபால், சட்டத்தை மீறி எதையும் செய்யவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.
நடிகை அமலா பாலைத் தொடர்ந்து மலையாள நடிகர் பகத் பாசிலும், போலி முகவரி கொடுத்து சட்டத்தை மீறியதாக செய்திகள் வெளியானது. பகத் பாசிலைத் தொடர்ந்து நடிகர் சுரேஷ் கோபி மீதும் இதேபோன்ற குற்றச்சாடடு சுமத்தப்பட்டது.
இந்த நிலையில், நடிகை அமலாபால் சட்டவிதிகளுக்கு உட்பட்டே காரை பதிவு செய்துள்ளார் என்றும், அமலாபால் தனது பென்ஸ் காரை புதுச்சேரியில் பதிவு செய்ததில் சட்ட விதிமுறை மீறல் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், புதுவை அமைச்சர் ஷாஜகான், போலி முகவரியில் கார் பதிவு செய்யப்பட்டதை கேரள அரசு உறுதிப்படுத்தினால் அமலா பால் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நடிகை அமலாபால் தவிர வேறு யாராக இருந்தாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், வாகனம் பதிவு செய்யப்படும் என்றும், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பதிவு செய்து கொள்ள சட்டத்தில் இடம் உள்ளதாகவும் புதுவை அமைச்சர் தெரிவித்துள்ளார்.