
மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் பாஜகவினர் வெற்றி பெற்றுள்ளதாகவும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தில்லு முல்லு செய்ய முடியும் எனவும் ஹர்த்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது.
காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தின் 33 மாவட்டங்களில் 37 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
அப்போது பா.ஜ.க 103 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 74 இடங்களை பிடித்திருந்தது. குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 இடங்கள் வேண்டும்.
இந்த இலக்கை பா.ஜ.க கடும் போராட்டத்துக்குப் பிறகு எட்டிப்பிடித்தது. இதன் மூலம் பா.ஜ.க குஜராத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து பாஜகவை எதிர்த்து குரல் கொடுத்து வரும் ஹர்த்திக் பட்டேல், மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் பாஜகவினர் வெற்றி பெற்றுள்ளதாகவும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தில்லு முல்லு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
பட்டேல் சமூகத்தினர் சரியான முறையில் வாக்குகள் அளித்திருப்பதாகவும் அவற்றில் பல வாக்குகள் கணக்கில் வரவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சூரத், ராஜ்கோட், அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஹர்த்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.