ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
கோடை காலம் துவங்கி விட்டதால் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார், சில நாட்களில் டெல்லியில் மிக லேசான மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு கோடை காலம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நரேஷ் குமார், இப்போதே அதனை கூறுவது கடினம். ஆனால், வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்; ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றார். “ஏப்ரல் நெருங்கி வருவதால், இயல்பை விட அதிகமான வெப்பநிலையை எதிர்பார்க்கிறோம். ஏப்ரல் மாதத்தில், நாட்டின் மத்திய பகுதியில் வெப்ப அலை வீசக்கூடும்.” என நரேஷ் குமார் தெரிவித்தார்.
அந்த வெப்ப அலை அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு நாட்டின் மையப் பகுதியில் நீடிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த சில நாட்களுக்கான வானிலை குறித்து தெரிவித்த நரேஷ் குமார், ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், ஆழங்கட்டி மழை கூட பெய்ய வாய்ப்புள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைக்கு இந்த உத்தரவுதான் போட்டுள்ளேன்: பிரதமர் மோடி சொன்ன தகவல்!
அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்தியப் பிரதேசத்தில் வெப்ப அலைகள் இருக்கும், குறிப்பாக மத்திய இந்தியாவில் வறண்ட வானிலை நிலவும் எனவும் கூறிய அவர், கர்நாடகாவின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் வெப்ப அலைகள் நிலவும் என்றார்.
அடுத்த நான்கைந்து நாட்களில் கேரளா, தமிழ்நாடு, கடலோர ஒடிசா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காணப்படும் எனவும் அவர் கணித்துள்ளார்.