சோகத்தில் சென்னை அபிநந்தன் வீடு !! பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு !!

By Selvanayagam PFirst Published Feb 28, 2019, 8:13 AM IST
Highlights

பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தனின் சென்னை வீட்டில் அவரது பெற்றோரும், உறவினர்களும் சோகமே உருவாக அமர்ந்துள்ளனர். அவரது வீட்டைச் சுற்றி ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையிலும், இனியொரு தாக்குதல் நடத்திவிடாதபடிக்கு தடுக்கும் வகையிலும் இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று முன்தினம் அதிகாலை பாகிஸ்தானுக்கு பறந்து சென்று அதிரடி தாக்குதல்கள் நடத்தின. 

இந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசார் உள்பட 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல், பாகிஸ்தானை நிலைகுலைய செய்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் ‘எப்-16’ ரக போர் விமானங்கள் நேற்று காலையில் காஷ்மீரின் நவ்ஷெரா, பூஞ்ச் செக்டாருக்குள் அத்துமீறி நுழைந்தன. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானங்கள், பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடித்தன.

அவற்றில் ஒரு விமானம் பாகிஸ்தானின் லாம் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானம் கீழே விழுந்தபோது பாராசூட் விரிந்ததாகவும், அதன் விமானி தப்பித்திருக்கக்கூடும் எனவும் செய்தி நிறுவனம் ஒன்று கூறியது.

இந்தியாவின் 2 போர் விமானங்கள் அத்துமீறி பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்ததாகவும், அவற்றை சுட்டு வீழ்த்தி உள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியது.

இதையொட்டி பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிப் கபூர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “ இந்திய போர் விமானங்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டபோது அது ஆசாத் காஷ்மீரில் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) விழுந்தது. மற்றொன்று காஷ்மீரில் விழுந்தது. ஒரு இந்திய விமானி கைது செய்யப்பட்டுள்ளார்” என கூறி உள்ளார்.

பாகிஸ்தான் படையிடம் சிக்கிய இந்திய விமானி, விங் கமாண்டர் அபிநந்தன். அவர் ராணுவ விதிமுறைகள்படி நடத்தப்படுகிறார்” என குறிப்பிட்டார். இதையடுத்து அவர் அபி நற்தன் என்பதை இந்திய ராணுவ அதிகாரிகளும் உறுதி செய்தனர்.

இந்த அபி நந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், தெரிய வந்தது. இதையடுத்து சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் அமர்ந்துள்ளனர். தங்கள் மகனை எப்படியாவத மீட்டுத் தர வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அபி நந்தனின் வீட்டுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். தற்போது அபிநந்தனின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

click me!