பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மன் அறிவித்துள்ளார்
எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்த சில மணி நேரத்தில் பஞ்சாபில், காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அம்மாநில ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மன் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி பஞ்சாப் மாநில ஒருங்கிணைப்பாளருமான பகவந்த் மன் அறிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் தனித்து போட்டியிடும் மம்தா பானர்ஜியின் முடிவு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், பஞ்சாப் மாநிலத்தில் தனது கட்சிக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். ஆனால், டெல்லியில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணிக்கு இன்னும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் தனித்து போட்டியிடுவதில் ஆம் ஆத்மியின் உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்த அவர், அம்மாநிலத்தில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற தயாராக உள்ளது எனவும் அவர் கூறினார்.
சண்டிகரில் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணியில் உள்ளது. ஆனாலும், சண்டிகர் மக்களவைத் தொகுதியையும் சுட்டிக்காட்டி, ஆம் ஆத்மியால் 14 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடியும் என்றார். மக்களவை தேர்தல் 2024இல் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து போட்டியிடும் திட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தொகுதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டி: மம்தா பானர்ஜி அதிரடி!
முன்னதாக, தொகுதி பங்கீடு பேசுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். மேற்குவங்க மாநிலம் வரும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை குறித்து தங்களுக்கு தெரிவிக்கவில்லை எனவும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, மேற்குவங்கத்தின் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் வெறும் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க மம்தா பானர்ஜி முன்வந்துள்ளார். ஆனால், இதனை ஏற்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால், ஏற்பட்ட விரிசலால் தனித்து போட்டியிடும் முடிவை மம்தா பானர்ஜி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மம்தா தனித்து போட்டி: இந்தியா கூட்டணிக்கு சாவுமணி - பாஜக கடும் தாக்கு!
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கட்சிகளான ஆம் ஆத்மி, திரிணாமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உரசல் போக்கு நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், திரிணாமூல், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.