
தபால் நிலையங்களில் செய்யப்படும் டெபாசிட்கள், தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம், பி.பி.எப்., சிறுசேமிப்பு என அனைத்துக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே தபால்நிலையங்களில் கணக்கு வைத்து இருப்பவர்கள், டெபாசிட் செய்தவர்கள் வரும் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
சமூக நலத்திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைக்கக் கூறி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கிக்கணக்கு, வருமான வரித் தாக்கலுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடுவும் இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 35 அமைச்சகங்களின் கீழ் 135 திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமையஸ் கியாஸ் மானியம், மண்எண்ணெய் மானியம், ரேஷன் பொருட்கள், மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களில் பயணாளிகளின் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தபால் நிலையங்களில் செய்யப்படும் டெபாசிட்களுக்கும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த மாதம் 26-ந்தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, தபால் நிலையங்களில் செய்யப்படும் அனைத்து டெபாசிட்கள், சேமிப்பு கணக்குகள், பி.பி.எப்., தேசிய சேமிப்பு பத்திரம் திட்டம், கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவை வாங்கும் போது, அதனுடன் ஆதார் அட்டை நகலும் தருவது கட்டாயம் என்று தனித்தனியாக அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
தபால் நிலையங்களில் ஏற்கனவே டெபாசிட்கள் வைத்து இருப்பவர்கள், சேமிப்பு பத்திரங்கள்,கிசான் விகாஸ் பத்திரங்கள் பெற்று இருப்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால், வரும் டிசம்பர் 31-ந்தேதிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் எனஅ அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர் ஓய்வூதிய திட்டம், வீட்டு மானிய திட்டம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, ஆம் ஆத்மி பீமா ஜோஜனா திட்டம், தேசிய பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டு திட்டம், பயிர் காப்பீடு திட்டம், வட்டி மானிய திட்டம், கல்வித்துறையில் ஸ்காலர்ஷிப் பெறுபவர்கள், பல்வேறு திட்டங்களில் உதவித் தொகை பெறுபவர்கள், பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம், அடல் பென்ஷன் யோஜனாதிட்டம் ஆகியவற்றின் பயணாளிகள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 2017, டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.