
ஆண்டு நிதி நிலை அறிக்கையையும், தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கான ரிட்டன்களையும் தாக்கல் செய்யாத 4.5 லட்சம் போலி நிறுவனங்களின் இயக்குநர்களை தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
இந்த 2 லட்சம் பேரும், 2013ம் ஆண்டு கம்பெனிச் சட்டத்தை மீறியதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஒட்டுமொத்தமாக தகுதி நீக்கம் செய்யப்பட உள்ள போலி நிறுவனங்களின் இயக்குநர்கள் எண்ணிக்கை 4.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது-
நாட்டில் கருப்பு பணத்துக்கு எதிராக மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் போலி நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்து பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதில் சட்டப்படி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாது.
போலி நிறுவனங்கள் தொடங்கி எந்த விதமான வர்த்தகமும் செய்யாமல், சட்டவிரோதமாகபணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனங்களும், அதன் இயக்குநர்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 22-ந்தேதி 2 லட்சத்து 17 ஆயிரத்து 239 நிறுவனங்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 3.19 லட்சம் இயக்குநர்கள் அடையாளம் காணப்பட்டு, கம்பெனிச் சட்டம் 2013ன்படி, பிரிவு 164ன்கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 4.50 லட்சமாக அதிகரிக்கும்.
இந்த போலி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக எந்தவிதமான வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை, வரியும் அரசுக்கு செலுத்தவில்லை, தொடர்ந்து 3 ஆண்டுகளாக வருமானவரி ரிட்டன்களும்தாக்கல் செய்யவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.