
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஆம்புலன்ஸ்களில் வரும் நோயாளிகள் அல்லது உறவினர்கள் ஆதார் எண்ணை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காஸ் மானியம் பெற… வங்கி கணக்கு தொடங்க… அரசின் சலுகைகளைப் பெற… பான் அட்டை பெற.. விமான பயணம் செல்ல…என ஒவ்வொன்றுக்கும் ஆதார் எண் கட்டாயம் என அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் அரசு மருத்துவமனை ஆம்புலன்சை பயன்படுத்த ஆதார் கட்டாயம் என்று உத்தரபிரதேச மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உண்மைக்கு புறம்பாக போன் அழைப்புகளை வரச்செய்து, பணிநேரம், எரிபொருள் செலவு குறித்து பொய்பான தகவல்களை அளித்து பெரும்முறைகேடு செய்வதாகவும், இந்த முறைகேட்டை தவிர்க்கவே, நோயாளிகள் அல்லது அவர்களின் உறவினர்கள், ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்த ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் விபரங்கள் அளிக்கப்படாவிட்டாலும், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துசெல்ல ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலான கிராம மக்களுக்கு இன்னும் ஆதார் அட்டைகள் வழங்கப்படாதநிலையில், ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டிற்கு ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்பு பொது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.