
வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்காத மாமனாரை தர,தரவென இழுத்து வந்து போலீசில் புகார் செய்த மருமகள், விரைவில் கட்டிக் கொடுப்பேன் என்று எழுதி பெற்றுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், மினாப்பூர்மண்டலம், சேகன் நியுரா கிராமத்தைச் சேர்ந்த பெண்தான் இந்த துணிச்சலான காரியத்தை செய்துள்ளார்.
இது குறித்து முசாபர்பூர் போலீஸ் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி ஜோதி நிருபர்களிடம் கூறியதாவது-
சேகன் நியுரா கிராமத்தைச் சேரந்த இளம் பெண் ஒருவர் செப்டம்பர் 25-ந்தேதி போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் செய்தார். அதில், தனது மாமனாரும், மைத்துனரும் வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க மறுக்கிறார்கள். தனது கணவர் தமிழகத்துக்கு வேலைக்கு சென்று இருக்கிறார். தன்னால், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்த முடியாது எனக் கூறியும், மாமனாரும், மைத்துனரும் தனது கோரிக்கையை காது கொடுத்து கேட்கவில்லை என்று தெரிவித்தார்.
இதனால், எனது கணவர் வேலைக்கு வெளிமாநிலம் சென்றதும், தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும், அவர் மீண்டும் கிராமத்துக்கு வரும்போது, தான் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வர வேண்டும். இது மிகவும் சிரமமாக இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.
ஆதலால், மாமனாரையும், மைத்துனரையும் விரைவாக கழிவறையை கட்டிக்கொடுக்க உத்தரவிடக்கோரி புகாரில் கூறி இருந்தார். இதையடுத்து, அந்த பெண்ணின் மாமனாரையும், மைத்துனரையும் அழைத்துப் பேசினோம்.
ஒரு வாரத்தில் கழிவறை கட்டிக்கொடுக்க கூறினோம். ஆனால், பணப்பற்றாக்குறை இருப்பதால், கூடுதல் அவகாசம் கேட்டனர். அவர்கள் விரைவாக கழிவறை கட்டிவிடுவோம் என உறுதி அளித்து, எழுதிக் கொடுத்தபின், அந்த பெண் புகாரை வாபஸ் பெற்றார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.