
டெல்லியில் ராணுவ தலைமையக உயர் அதிகாரி கைது: சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை
பணி மாறுதலுக்கு லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் டெல்லி தலைமையகத்தில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உயர் அதிகாரி மானி
டெல்லியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரியாக (லெப்டினென்ட் கர்னல்) பணிபுரிந்து வந்தவர் ரங்கநாதன் சுவரமணி மானி.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர் 1994-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தான் இவர் ராணுவ தலைமையகத்துக்கு மாறுதலாகி வந்தார்.
பணி மாறுதலுக்கு
ராணுவ அதிகாரிகள், தாங்கள் விரும்பிய இடத்திற்கு மாறுதல் வாங்கிச் செல்வதற்காக இடைத்தரகர்கள் மூலம் அதிகாரி மானிக்கு லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுக்க தயாராக இருந்ததாக உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அதிகாரி மானி லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதால் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
ரூ.2 லட்சம் லஞ்சம்
பெங்களூரை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவருக்கு பணி மாறுதலுக்காக இடைத்தரகர் கவுரவ் கோலி என்பவர் மூலமாக மானி ரூ.2 லட்சம் லட்சம் பெற்றது விசாரணையில் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து கவுரவ் கோலியும்கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், மற்றொரு ராணுவ உயர் அதிகாரியான பிரிகேடியர் எஸ்.கே.குரோவர் என்பவருடைய பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் அவருடைய பெயர் இல்லை.
ஹவாலா முறையில்
கைதான அதிகாரி மானி, ஐதராபாத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி புருசோத்தம், பெங்களூருவை சேர்ந்த மற்றொரு அதிகாரி எஸ்.சுபாஷ் மற்றும் இடைத்தரகர் கவுரவ் கோலி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
லஞ்சப்பணம் ஹவாலா முறையில் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.