
மும்பையில் ஒரு தனியார் பள்ளியில் இருந்து 40 குழந்தைகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த விவரம் வருமாறு-
மஹாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு நகரில் உள்ள கே.எல். போன்டா பள்ளியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நேற்று சுற்றுலா சென்றனர். மும்பை கடலில் குளித்து மகிழ்ந்த அந்த பள்ளி மாணவர்கள் படகில் பயணம் மேற்கொள்ள ஆசைப்பட்டனர்.
இதையடுத்து, ஒரு படகில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஏற்றப்பட்டு கடலில் பயணம் செய்தனர். படகில் பயணம் செய்த எந்த மாணவருக்கும் உயிர்காக்கும் உடை வழங்கப்படாமல் பயணம் செய்தனர்.
கடலில் இருந்து 2 கடல்மைல் தொலைவில் சென்றபோது, படகு பாரம் தாளாமல் திடீரென கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலில் தத்தளித்தனர். இதைப் பார்த்த மற்ற அருகில் இருந்த மீனவர்கள், உடனடியாக கடலில் குதித்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
மேலும், இது குறித்து உடனடியாக கடலோரக் காவல்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த துரித நடவடிக்கையில் 35 மாணவர்கள் காப்பற்றப்பட்டனர். 4 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்ததால், அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும், டாமன் தீவில் இருந்து ஹெலிகாப்டர்களும், டார்னியர் விமானங்களும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து கடலோரப்படையின் மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், “ கடலில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கடலோரப் பாதுகாப்பு படைகளின் கப்பல்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. டாமன் தீவில் இருந்து ஹெலிகாப்டர்களும், டார்னியர் விமானங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன’’ எனத் தெரிவித்தார்.
பால்கர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நர்னாவாரே கூறுகையில், “ தஹானு கடற்கரைப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. மீட்புப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் எஸ்.பி., உள்ளாட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.