சனாதனம் பற்றிய தனது தனிப்பட்ட கருத்துக்களை உதயநிதி தனக்குள்ளும் தனது மாநிலத்திற்குள்ளூம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்
சனாதனம் குறித்து உதயநிதி தெரிவித்த கருத்துக்கு சிவசேனா கட்சி பதில் அளித்துள்ளது. உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சனாதனம் பற்றிய தனது தனிப்பட்ட கருத்துக்களை உதயநிதி தனக்குள்ளும் தனது மாநிலத்திற்குள்ளூம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர் “ இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை கூட்டணி கட்சியான திமுக கூறினால், பாஜக அதை அரசியலாக்கி எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தும். உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு யாரும் ஆதரவு அளிக்க மாட்டார்கள். நாம் எல்லாம் இந்தியா கூட்டணியில் உள்ளோம். இது திமுகவின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற கருத்துக்களை பேசாமல் தவிர்ப்பது நல்லது.
இந்த நாட்டில் சுமார் 90 கோடி இந்துக்கள் வாழ்கின்றனர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்சி, சீக்கியர்கள், லிங்காயத் மக்களும் வசிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கும். ஒரு நம்பிக்கை இருக்கும். அவர்களின் உணர்வுகளை நீங்கள் காயப்படுத்த முடியாது. உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை உங்களுக்குள்ளும், உங்கள் மாநிலத்திற்குள்ளும் வைத்துக்கொள்ளுங்கள்.
undefined
மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர், அவரை நாடே உற்று நோக்குகிறது. அவர் எங்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டார். எனவே, இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன், அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் வார்த்தைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கூறய கருத்து, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி, டெங்கு, மலேரியா, கொரோனாவை எதிர்க்க முடியாது. ஒழிக்க வேண்டும் அதே போல தான் இந்த சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும். சனாதானத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்று பேசியிருந்தார்.
திராவிடம் என்கிற வார்த்தையை வழங்கியதே சனாதனம் தான்.! ஒரே போடாக போட்ட எல்.முருகன்! எப்படி தெரியுமா?
உதயநிதியின் இந்த கருத்தை கண்டித்து பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் கொந்தளித்து வருகின்றன. பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சாமியார்கள் என பல தரப்பிலும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்து அமைப்புகள் சார்பில் உதயநிதிக்கு எதிராக காவல்நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அயோத்தி சாமியார் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே சென்று உதயநிதி தலைக்கு ரூ.10 பரிசு கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாங்களாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் தூதர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடிதம் எழுதியுள்ளனர்.
சனாதன சர்ச்சை தொடர்பாக தன் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்த சாமியார் மீது வழக்குப்போடுவது, உருவ பொம்மை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே சமூக வலைதளங்களில் உதயநிதியை கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதே நேரம் உதயநிதிக்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உதயநிதியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தாலும், மம்மா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்த சூழலில் சிவசேனா கட்சியும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.