அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு...!ரயில் சேவை முடங்கியது..! 6 லட்சம் மக்கள் பாதிப்பு

By Ajmal KhanFirst Published May 19, 2022, 8:35 AM IST
Highlights

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி வீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இழந்துள்ளனர். இதனையடுத்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.
 

வெள்ள பெருக்கால் மக்கள் பாதிப்பு

அசாமில் இடைவிடாத மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து அசாமின் பாரக் பள்ளத்தாக்கு மற்றும் டிமா ஹாசாவ் மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களான திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு ரயில் மற்றும் சாலை வசதி பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ரயில் நிலையங்கள் முற்றிலும் அடையாளம் தெரியாமல் அழிந்துள்ளது. ரயில் சேவையை சீரமைக்க 45 நாட்கள் ஆகும் என ரயில்வே துறை தெரிவித்துள்ள நிலையில் சாலை போக்குவரத்து 2 அல்லது 3 நாட்களில் சீரமைக்கப்படும் என அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். வெள்ள விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 150 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நடவடிக்கையாக வழங்கப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமாந்தா தெரிவித்தார்.  மேலும் வெள்ள நிவாரண பணிக்கு 1000 கோடி ரூபாயை மத்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் கூறினார்.


9 பேர் உயிரிழப்பு

அசாமின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 135 நிவாரண மையங்களில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். நாகோன் மாவட்டத்தில் 2.88 லட்சம் பேரும், கச்சாரில் 1.19 லட்சம் பேரும், ஹோஜாயில் 1.07 லட்சம் பேரும்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க பராக் பள்ளத்தாக்கிலிருந்து விமானங்கள் இயக்குவதற்கு தனியார் நிறுவனத்தோடு அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. டிக்கெட் விலை 3000 என நிர்ணயித்துள்ளது. இதற்கு மேல் ஏற்படும் கூடுதல் கட்டணங்களை அரசே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கவுகாத்தியில் உள்ள வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கு அப்பகுதியில் பரவலாக மழை பெற்ற வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது.     

click me!