எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆக்ரோஷ பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்..!

By karthikeyan VFirst Published Nov 13, 2020, 8:48 PM IST
Highlights

எல்லை பகுதியில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம்.
 

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சாவ்ஜியன், கெரன் உள்ளிட்டப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலியானதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் மற்றும் குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 2 வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். உரி பகுதியில் நடந்த தாக்குதலில் 2 வீரர்களும், குரேஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு வீரரும் வீரமரணமடைந்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா, குப்வாரா மற்றும் பந்திப்போரா மாவட்டங்களில் இருந்து, பாகிஸ்தான் பதுங்கு குழிகளை இந்திய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் குறிவைத்து தாக்கின. பாகிஸ்தானிய வெடிமருந்துகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கட்டிடங்கள் மற்றும் பங்கரவாதிகளுக்கான ஏவுதளங்களும் குறி வைத்து தாக்கப்பட்டன. இது தொடர்பான வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
 இந்திய ராணுவத்தினர் கொடுத்த பதிலடியில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். அதை அந்நாட்டு ராணுவமே உறுதி செய்துள்ளது. 

click me!